Tuesday, September 22, 2009

இலங்கையில் ஐந்து லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்யச் சென்றிருக்கும் துணைவேந்தர் முருகேச பூபதியும், அவருக்கான பதிலும்

தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் ப.முருகேச பூபதி அவர்களிடம் 22.09.2009 தினமலர் நாழிதழ் எடுத்த பேட்டியில் இருந்து :

"இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஐந்து லட்சம் ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்வது தொடர்பான ஆய்வு அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன் அடிப்படையில், அந்நாட்டுக்கு நவீன வேளாண் கருவிகள், விதை ரகங்கள், உரங்கள், பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என, கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் முருகேச பூபதி கூறினார்.

இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பு ஒடுக்கப்பட்ட பின் கிளிநொச்சி உள்ளிட்ட தமிழர் வசிக்கும் பகுதிகளில் விவசாய தொழிலை மேம்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித பயனும் இல்லாமல் காடு பிடித்து கிடக்கும் நிலத்தில் விவசாயத்தை மீண்டும் தழைக்க செய்ய, இந்திய அரசின் உதவியை இலங்கை நாடியுள்ளது. இதன் அடிப்படையில், இந்திய வெளியுறவுத் துறை சார்பில், ஆறு வேளாண் விஞ்ஞானிகள் அடங்கிய குழு சமீபத்தில் இலங்கை சென்று வந்தது. இதில், கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் முருகேச பூபதி மற்றும் நான்கு பேர் தமிழர்கள்.

இலங்கை பயணம் பற்றி துணைவேந்தர் முருகேச பூபதி கூறியதாவது: போருக்குப் பின் இலங்கையின் மறு சீரமைப்புக்கு உதவ இந்திய அரசு 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. அங்கு சில பகுதிகளில் விவசாய தொழில் செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஜூலை 23ல் டில்லியில் வெளியுறவுத் துறை சார்பில் முதல் கட்ட கூட்டம் நடந்தது. இதில், இலங்கையில் விவசாயம் செய்ய தேவையானவை பற்றி நேரில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.அதன் அடிப்படையில், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இந்திய வேளாண் ஆய்வு கவுன்சில் துணை டைரக்டர் ஜெனரல் திவாரி, கர்நாடகா வேளாண் பல்கலை துணைவேந்தர் செங்கப்பா, தமிழ்நாடு வேளாண் பல்கலை மூத்த பேராசிரியர் பர்வத்தமா உள்ளிட்ட ஆறு பேர் செப்., 16ல் இலங்கை சென்றோம். இவர்களில் நான்கு பேர் தமிழர்கள்.

அங்கு இலங்கை தூதரக அதிகாரி, தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகளுடன் நடந்த பல்வேறு கூட்டங்களில், இந்தியாவில் இருந்து வேளாண் விதை, உரங்கள், நவீன தொழில் நுட்ப கருவிகள் தங்களுக்கு தேவை என்றும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். முகாம்களில் குடியமர்த்தப்பட்டுள்ள தமிழர்களுக்கு விவசாய தொழில் செய்ய உதவுவதுதான் நோக்கம். இதற்கென 600 கோடி ரூபாய் திட்டத்தை இலங்கை அரசு வகுத்துள்ளது. தற்போது நிலத்தின் அடியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றும் பணி நடக்கிறது. இந்தியா மற்றும் டென்மார்க் நாட்டு சிறப்பு குழுவினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜனவரி மாதம் இப்பணிகள் முடிந்த பின் அந்த நிலங்களில் விவசாயம் பயிரிட முடியும்.

இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் உடன்பிறந்த சகோதரர் பேசில் ராஜபக்ஷே தற்போது அந்நாட்டு ஆலோசகர் ஆக உள்ளார். அவர், இந்தியாவின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார். இலங்கையின் புனரமைப்புக்கு இந்தியாவையே நம்பியிருப்பதாக தெரிவித்த அவர், விவசாயம் செய்ய தேவையான தொழில் நுட்பம், பயோ டெக்னாலஜி, மண் ஆய்வுக்கான மொபைல் லேப், புதிய பயிர் ரகங்களை அளித்து உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இலங்கையில், விவசாயம் பயிரிட "மகா' மற்றும் "எல்லா'(சம்பா, குறுவை) ஆகிய இரு சீசன்கள் உள்ளன. அங்குள்ள காலநிலைக்கு பயிர்கள் நூறு சதவீதம் நன்கு விளைய சம்பா சீசன்தான் உகந்தது. அங்கு 42 சதவீத குறுவை பயிர்கள் மழையை நம்பியுள்ளன. தற்போது ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் பகுதியில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதில், 60 ஆயிரம் ஏக்கர் நிலம் கடந்த 20 ஆண்டுகளாக காடு பிடித்து பாழ்பட்டு கிடக்கிறது. அவற்றை அகற்றி சுத்தம் செய்த பின்னரே நிலத்தை விவசாயத்துக்கு தயார் செய்ய முடியும். நெல், சின்ன வெங்காயம், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் நிறைய விளைகின்றன. புதிய ரக கத்தரிக்காய் அறிமுகம் செய்துள்ளனர்.

இந்தியாவை விட இலங்கையில் அதிக மழை பெய்கிறது. அங்கு மக்கள் தொகை இரண்டு கோடிதான். இதனால், தனி நபர் வருமானம் அதிகம். விவசாயம் செய்தால் அவர்களின் வருமானம் மேலும் பெருகும். இலங்கையில் ஐந்து லட்சம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் தழைக்க தேவையான விஷயங்கள் பற்றிய ஆய்வு அறிக்கையை மத்திய, மாநில அரசுகளிடம் சமர்ப்பிக்கவுள்ளோம். அதன் அடிப்படையில் அங்குள்ள விவசாயிகளுக்கும், வேளாண் விரிவாக்க அலுவலர்களுக்கும் இந்தியாவிலோ, இலங்கையிலோ இந்தியா பயிற்சி அளிப்பது பற்றி இந்திய அரசு முடிவு செய்யும்.இவ்வாறு, துணைவேந்தர் முருகேச பூபதி கூறினார்.

"கனத்த இதயத்துடன் திரும்பினேன்' : துணைவேந்தர் முருகேசபூபதியின் இலங்கை பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வேளாண் பல்கலை முன் நேற்று மாலை சில அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையொட்டி, பல்கலை முன் காலை முதலே பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

துணைவேந்தர் முருகேச பூபதியிடம் கேட்டதற்கு, ""தமிழினத்துக்கு எங்கள் பயணம் துரோகம் செய்யவில்லை. அங்கு விவசாயம் செழித்தால் முகாம்களில் அடைப்பட்டு கிடக்கும் தமிழர்களுக்கு புனர் வாழ்வு கிடைக்கும். இங்கிருந்து அனுப்பும் உதவிகள் அவர்களை சரியாக சென்றடைய இது போன்ற திட்டங்கள் உதவும். வட இலங்கையில் விவசாயத்தை தழைக்க செய்து அங்குள்ள தமிழர்களின் மறுவாழ்வுக்கு உதவுவதே மத்திய,மாநில அரசுகளின் நோக்கம்.""இந்தியா ஒதுக்கியுள்ள 500 கோடி ரூபாயின் ஒரு பகுதியை, விவசாயத்துக்கு தேவையான இயந்திரங்கள், விதைகள், உரங்கள் என, பொருட்களாக கொடுத்தால் தமிழர்களின் வாழ்வுக்கு அது நேரடி பயன் தரும். தமிழர்களின் தற்போதைய பரிதாப நிலையை கேட்டறிந்து, தமிழன் என்ற நிலையில் அங்கிருந்து கனத்த இதயத்துடன் திரும்பினேன்,'' என்றார்.

----------------------------------------------------------------------------------------------------------------------------

கோவை வேளாண் பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர்..முருகேசபூபதியும் அவர்தம் கூட்டாளிகளும் அறிந்துகொள்ள வேண்டியது என்ன?

வன்னிப் பெருநிலத்தினை மேம்படுத்தும் வளர்ச்சித் திட்டங்களை அந்த நிலத்தில் காலங்காலமாக வாழ்ந்த வன்னித் தமிழ் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கு இலங்கை-இந்திய அரசுகள் உதவலாமேயொழிய மேலிருந்து திணிக்கக் கூடாது. டாக்டர்..முருகேசபூபதி அவர்கள் இங்கு விளக்குகின்ற வேளாண் திட்டமானது சிங்கள அரசால் முன்வைக்கப்பட்டு, மேலிருந்து திணிக்கப் படும் ஒன்றாகும். வன்னி மக்களால் முன்வைக்கப்பட்ட திட்டமல்ல அது.

முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக இலங்கை அரசு மே 7 ஆம் தேதியன்று 19 பேர் கொண்ட குழுவொன்றை அமைத்தது. 1 லட்சத்து 40 ஆயிரம் வன்னி மக்கள் காணாமல் போனதற்கு இவர்களே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள பலர் அந்தக் குழுவில் உள்ளனர். இதில் முதன்மையானவரே டாகடர்..முருகேசபூபதி அவர்களின் குழு சந்தித்த பசில் ராஜபக்சா. அவரே அந்தப் 19 பேர் கொண்ட குழுவின் தலைவர். மேலும் அதில் உள்ளவர்கள் அனைவரும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களே. இந்தக் குழு உடனடியாகக் கலைக்கப்படுவதே நீதிக்கான செயலாக இருக்கும்.இந்தக் குழுவிற்குப் பதிலாக ஐ.நா.சபையின் தலைமையில் அனைத்துலகத்தையும் சேர்ந்த மனித உரிமை அமைப்புகளை உறுப்பினர்களாகக் கொண்ட - அதிகாரத்தை உடைய - மீள்குடியேற்ற செயற்குழு ஒன்று அமைக்கப்படுவதே சரியான செயலாக இருக்க முடியும்.

வன்னிப் பெருநிலத்தில் சிங்கள இராணுவம் காவல்துறை, நிர்வாகம் மற்றும் அவர்தம் குடும்பத்தினரைச் சேர்ந்த சுமார் இரண்டரை லட்சம் பேரைக் குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை சீன நிதி உதவியுடன் இலங்கை அரசு அவசரம் அவசரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தச் செயல்பாடுகள் குறித்து வேளாண் அமைச்சர் திரு.வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் அவர்களின் சிறப்பு நேர்முக உதவியாளராக சுமார் பத்தாண்டுகளாக இருந்த டாக்டர்..முருகேசபூபதி அவர்கள் ஏன் குறிப்பிடவில்லை? இந்தக் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டும் என்பதுதானே நீதிக்கான நடவடிக்கையாக இருக்க முடியும்? வன்னியின் பாதுகாப்பு குறித்து அந்நில மக்களுடன் கலந்தாய்வு செய்த பின்னர் சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் அதற்கான நடவடிக்கைகளை சிங்கள அரசு எடுக்க வேண்டுமேயொழிய, தன்னிச்சையாக அது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நீதிக்கான செயல்பாடாக இருக்காது.

போரில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் வன்னி மக்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களுக்கு என்ன நேர்ந்தது, அதற்குக் காரணம் யார் என்பதைப் பாரபட்சமின்றி அறிந்திட சர்வதேச் குழு ஒன்று அமைக்கப் படல் வேண்டும் அல்லவா?

இந்தக் கருத்துக்களே பேராசிரியர்.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களிடம் ஆகஸ்டு மாதத் தொடக்கத்தில் முன்வைக்கப்பட்டது.அவர் அதனைப் புரிந்து கொண்ட போது பெரிதும் மனம் வருந்தினார். "இலங்கையில் இன்றைய அரசியல் சூழ்நிலை நீதிக்கான ஒன்றாக இல்லை; அது மாறும் வரை நான் அங்கு போக மாட்டேன் " என்று வெளிப்படையாக அறிவித்தார்.

அவர் கூறிய அரசியல் சூழ்நிலை இன்று மாறிவிடவில்லை.மேலும் தரம் தாழ்ந்தே போயிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் வழியைப் பின்பற்றாது, இலங்கை சென்ற ஆறு பேர் குழுவில் நான்கு பேர் தமிழர்கள் இருந்தார்கள் என்பது அவர்கள தமிழ் இனத்திற்கு இழைத்த மாபெரும் துரோகம் என்றே கருதத் தோன்றுகிறது.

சிங்கள இராணுவத்தின் மத்தியில் ஆண் துணையின்றி வேளாண்மையில் கட்டாயமாக ஈடுபடுத்தப்படவுள்ள நம் இனத்தின் தாய்மார்களுக்கு மானத்தைப் பெற்றுத் தராது அவர்களின் பாழும் உடலை நீட்டிக்கச் செய்யும் பணியினை செய்யப் போகிறோம் என்று அவர் கூறியிருப்பதை யாரிடம் சொல்லி அழுவது?

வன்னி மண்ணின் பெயரைக்கொண்டிருக்கும் சமூகத்தில் பிறந்த டாகடர்..முருகேசபூபதி, டாக்டர்.எம்.பரமாத்மா ஆகியோரும், அவர்களது துறையின் அமைச்சரும், அவர்களை இலங்கை செல்ல அனுமதி அளித்தவருமான திரு.வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் அவர்களும் இந்த ஈனச் செயலுக்கு எப்படித் துணைபோக முடிவு எடுத்தார்கள் என்பதுதான் நம் அனைவருக்கும் மிகப் பெரும் "கனத்த இதயத்தைக்" ஏற்படுத்துவதாக உள்ளது. (மீதமுள்ள இரண்டு தமிழர்களான பி.ஷ்யாம் மற்றும் கே.விஜயராகவன் ஆகியோரின் பெயர்களை ஏன் அவர் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்? )

பேராசிரியர் சுவாமிநாதன் என்ற அந்தணர் செய்யத் துணியாத ஒரு செயலை இந்த வன்னியச் சிங்கங்கள் ஏன் செய்தன?

17 ஆவது நூற்றாண்டில் மருத நாயகம் என்ற யூசுப் கானைக் காட்டிக்கொடுத்த ஸ்ரீனிவாச ராவ்...18 ஆம் நூற்றாண்டில் மாவீரன் திப்புவைக் காட்டிக்கொடுத்த பூர்ணய்யா... அதே காலகட்டத்தில் தீரன் சின்னமலையைக் காட்டிக்கொடுத்த கரும்பாறை நல்லப்பன்... 19 ஆம் நூற்றாண்டில் மாவீரன் கெட்டி பொம்முவைக் காட்டிக் கொடுத்த புதுக்கோட்டை தொண்டைமானும், எட்டப்பனும்....20 ஆம் நூற்றாண்டில் இந்திக்காகத் தமிழர்களைக் காட்டிக் கொடுக்கத் துணிந்த சென்னை மாகாணத்தின் முதல் மந்திரி பக்தவச்சலம்... இன்று தமிழ் இனமே இடிந்து நிற்கும் வேளையில் அதனை சிங்கள இனவெறியர்களிடம் காட்டிக் கொடுக்கப் போகும் அரிய பணிக்குத்தான் இவர்கள் வன்னி மண்ணை மிதித்த்திருக்கிறார்களா?

தமிழ் இனத்தின் பூர்வீக மண்ணைக் காட்டிக்கொடுத்து - வரலாற்றின் கறை படிந்த பக்கங்களில் - இவர்கள் தம் பெயரை இணைக்கத்தான் போகிறார்களா?

அன்புடன்

- மாதவி



Monday, September 14, 2009

வடக்கின் வசந்தம் திட்டம் : ஓர் அறிமுகம்

மாதவி

நான்காம் ஈழப் போர் 2009 மே மாதம் 18 ஆம் தேதியன்று முடிவடைந்தது. இந்தப் போரில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் வன்னித் தமிழ் மக்கள் காணாமல் போயினர். சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் இலங்கை அரசால முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர்.

வடக்கின் வசந்தம் என்ற திட்டத்தை இலங்கை அரசு ஏப்ரல் 2009 இல் முன் வைத்தது. போரின் மூலம் தான் கைப்பற்றப்போகும் வன்னிப் பெருநிலத்தையும், ஏற்கனவே தன் அதிகாரத்தின் கீழ் உள்ள யாழ் குடா பகுதியையும் தனக்கு சாதகமான நிலப்பகுதியாக எவ்வாறு மாற்றி அமைப்பது என்பதே அந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்குழுவினை 2009 மே 7 ஆம் தேதியன்று இலங்கை அரசு ஏற்படுத்தியது. ஜனாதிபதியின் தம்பியும், ஆலோசகரமுமான பசில் ராஜபக்சாவின் தலைமையிலான 19 பேரைக் கொண்ட அந்தக் குழுவில் ஒருவர் கூடத் தமிழர் இல்லை என்பதே அந்தத் திட்டத்தின் உண்மை நோக்கத்தைப் புரிய வைப்பதாக அமைந்தது.

இந்த செயற்குழுவானது மூன்று நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டது:

* வட ஈழத்தில் இராணுவ முகாம்களை நிறுவுவதும், சிங்களர்களைக் கொண்ட சிவில் நிர்வாகத்தை நிறுவுவதும், கன்னி வெடிகளை அகற்றுவதும் இந்தத் திட்டத்தின் முதல் நோக்கம்.

* முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களை மீண்டும் வன்னி நிலத்தில் குடியேற்றுவதும், அதற்குத் தேவையான அடிப்படைக் கட்டுமானங்களை நிறுவுவதும் இரண்டாம் நோக்கம்.

* வவுனியா மற்றும் யாழ்ப்பாண நகராட்சித் தேர்தலை ந்டத்துவதும், 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதும் மூன்றாம் நோக்கமாகும்.

வடக்கின் வசந்தம் என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம் மேற்கண்ட மூன்று நோக்கங்களை நடைமுறைப்படுத்தும் போக்கில் சாலைகள், போக்குவரத்து மற்றும் பொது நிறுவனங்களின் கட்டிடங்களை சீரமைக்கும் பணியிலும், மின்சாரம், குடிநீர் மற்றும் வடிகால் வசதிகளை அமைக்கும் பணியிலும், வேளாண்மை, கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழில் ஆகியவற்றை மேம்படுத்தும் பணியிலும் ஈடுபடும். வட ஈழத்தின் பாசன வசதியைப் பெருக்குவதும், கல்வி மற்றும் கலாச்சாரத்தை திட்டமிட்டு ந்டைமுறைப்படுத்துவதும், காவல்துறை, தபால்துறை, வங்கி மற்றும் கூட்டுறவுத் துறையை அமைப்பதுவும், தொழிற்சாலைகளை அமைக்க ஊக்குவிப்பதும், தொழிற்கல்வியை அளிப்பதுவும் இந்தத் திட்டத்தின் பிற பணிகளாம்.

இந்தப் பணிகள் மூன்று காலகட்டங்களில் செயல்படுத்தப்படும்.

* முதல் கட்டப் பணிகள் 2009 ஜூன் மாதத்தில் தொடங்கி டிசம்பர் மாதத்தில் முடிவடையும்.
* இரண்டாம் கட்டப் பணிகள் 2010 ஆம் ஆண்டில் தொடங்கி 2011 ஆம் ஆண்டில் முடிவடையும்.
* மூன்றாம் கட்டப் பணிகள் 2012 ஆம் ஆண்டில் இருந்து எடுக்கப்படும்.

வடக்கின் வசந்தத் திட்டத்தில் இந்திய அரசின் பங்கு :

இலங்கை அரசால் வடக்கின் வசந்தம் திட்டம் முன்வைக்கப்பட்ட மறு நாளே இந்திய அரசு இந்தத் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் நிதி உதவியை அறிவித்தது. மே 23 ஆம் தேதியன்று இந்தத் தொகை 500 கோடி ரூபாயாகக் கூட்டப்பட்டது. ஜூன் 25 ஆம் தேதி பசில் ராஜபக்சா புதுதில்லி வந்திருந்த போது இந்தத் தொகையை 1000 கோடி ரூபாயாக உயர்த்தவும் மன்மோகன் அரசு முன்வந்திருப்பதாக செய்திகள் வெளியாயின.

முகாம்களில் அடைக்கப்பட்ட காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளை அமைப்பது, கண்ணி வெடிகளை அகற்றுவது என்பன இந்திய அரசு வடக்கின் வசந்தம் தொடர்பாக எடுத்த முதல்கட்டப் பணிகளாகும். போரில் அழிவுக்குள்ளான கட்டிடங்களையும், விளைநிலங்கள் மற்றும் பாசன ஆதாரங்களையும் மீளுருவாக்குவது அது எடுக்கவுள்ள அடுத்த்க்கட்டப் பணிகளாகும். இந்தப் பணிகள் அனைத்திலும் ஈழத் தமிழ் மக்கள் ஈடுபடுத்தப்படுவர். அவர்களை இந்தப் பணிகளுக்காகப் பயிற்றுவிக்கும் செயலை இந்திய அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது.

மருத்துவப் பணிக்காக இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்தியக்குழு தன் பணியை முடித்துவிட்டு இன்று நாடு திரும்பி விட்டிருக்கிறது. கன்ணிவெடிகளை அகற்ற பூனாவைச் சேர்ந்த “ஹோரைசன்” மற்றும் நோய்டாவைச் சேர்ந்த ”சர்வத்ரா” ஆகிய தனியார் நிறுவனங்கள் வன்னிப் பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ளன.

வடக்கின் வசந்த வேளாண் பணிகளை இலங்கை அரசுடன் சேர்ந்து திட்டமிடுவதற்காக ஜூன் 9 ஆம் தேதியன்று இலங்கை ஜனாதிபதி ராஜப்க்சாவை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் சார்பாக வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் சந்தித்தார். பின்னர் அது குறித்த விரிவான கட்டுரையை இந்து நாளிதழில் அவர் ஜூன் 16 ஆம் தேதியன்று எழுதினார்.

ஆகஸ்டு மாதத் துவக்கத்தில எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் வடக்கின் வசந்தம் திட்டத்தில் கலந்துகொள்ள இந்திய வேளாண் நிபுணர் குழு இலங்கைக்கு செல்லவிருந்தது. எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு எதிராக சீமான் தலைமையிலான ”நாம் தமிழர் இயக்கம்” மேற்கொண்ட பரப்புரையாலும் , அறிவித்த முற்றுகைப் போராட்டத்தாலும் அதிர்ந்துபோன அவர் இலங்கையில் தற்சமயம் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் மாறாதவரை தான் அங்கு போகப்போவதில்லை என்று ஆகஸ்டு 6 ஆம் தேதியன்று பகிரங்கமாக அறிவித்தார்.அவரது முடிவால் இந்தியாவின் வேளாண் குழு இலங்கைக்குள் செல்வது தாமதமாகியிருக்கிறது. இருப்பினும் ஆகஸ்டு இறுதியிலோ அல்லது செப்டம்பர் துவக்கத்திலோ அது இலங்கைக்குப் பயணமாகும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

போரினால் அழிவுக்குள்ளான கட்டிடங்களையும், கட்டமைப்புகளையும் புனரமைப்பதற்காக இந்தியாவின் கட்டுமானத் தொழில் வளர்ச்சிக் குழுமம் (Construction Industry Development Council - CIDC ) என்ற அமைப்பானது இலங்கை அரசின் கட்டுமான அமைச்சகத்துடன் ஜூலை 22 ஆம் தேதியன்று ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆகஸ்டு 2 ஆம் தேதியன்று அதே நிறுவனம் இலங்கைக் கட்டுமான அமைச்சகத்தின் கீழ் இயங்கும் Institute for Construction Training and Development (ICTAD) என்ற அமைப்புடன் யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் இருந்து 70 ஆயிரம் இளைஞர்களைக் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவதற்காகப் பயிற்றுவிப்பதகாக உடன்படிக்கை செய்து கொண்டுள்ளது.

( இலங்கை அரசு சர்வதேச நிதியத்திடமிருந்து கேட்டுக்கொண்ட 190 கோடி டாலரைக் கொடுக்க விடாமல் மேற்கத்திய நாடுகள், அதிலும் குறிப்பாக அமெரிக்காவும் இங்கிலாந்தும், இலங்கை அரசின் போர்க்குற்றங்களைக் காரணம் காட்டி தடுத்து வந்தன. அந்தப்பணத்தை இலங்கை அரசுக்கு வாங்கித் தர இந்திய அரசு பெருமுயற்சி எடுத்தது. கடைசியில் இலங்கை அரசு சர்வதேச நிதியத்திலிருந்து கேட்டுக்கொண்டதொகையைக் காட்டிலும் ஜூலை 25 ஆம் தேதியன்று 260 கோடி டாலரை அளிப்பதாக அந்த நிறுவனம் அறிவித்தது. இது இலங்கை அரசு கேட்டிருந்த கடனைக் காட்டிலும் 70 கோடி டாலர் அதிகமாகும். . இந்திய அரசு செய்த இந்த உதவிக்குப் பதிலாகவே ஜூலை 22 ஆம் தேதியன்று CIDC யுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள இலங்கை அரசு இசைந்தது. )

CIDC அமைப்பானது இந்திய அரசின் திட்டக் கமிஷனால் 1996 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தியாவின் தனியார் கட்டுமான நிறுவனங்களையும், பொதுத்துறை நிறுவனங்களையும் கொண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இன்று இந்த அமைப்பில் 90 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் 30 நிறுவ்னங்கள் அந்த அமைப்பின் நிர்வாகக் குழுவில் உள்ளன.

CIDC யில் உறுப்பினர்களாகத் தமிழ் நாட்டில் இருந்து இயங்கி வரும் நிறுவனங்களைக் கண்டறிந்து அவற்றின் நிர்வாகங்களிடத்தில் CIDC யின் ஒப்பந்தம் எவ்வாறு தமிழ் இனத்திற்கு எதிராக உள்ளது என்ற கருத்தை விளக்கும் பணி தமிழ் நாட்டின் ஈழ ஆதரவாளர்களின் முன் இன்று உள்ள தலையாய பணியாகும்.

இந்தியாவின் தெற்கு மின் வலையத்தையும் இலங்கையின் தேசிய மின் வலையத்தையும் 300 கிலோ மீட்டர் நீள உயர் அழுத்த மின்சாரக் கம்பிகள் மூலம் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்திய இலங்கை அரசுகள் ஆகஸ்டு மாத இறுதியில் கையெழுத்திட முடிவு செய்துள்ளன. இதன் மூலம் மதுரையும் அனுராதபுரமும் மின் கம்பிகளால் இணைக்கப்படும். மூன்றரை வருடங்களுக்குள் முடிக்கப்பட உள்ள இந்தத் திட்டத்தின் மூலம் மதுரையிலிருந்து முதலில் 500 மெகாவாட் மின்சாரமும், பின்னர் 1000 மெகாவாட் மின்சாரமும் இலங்கைக்கு அனுப்பப்படும்.

சர்வதேச நிதி நிறுவனங்களின் பங்கு :

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வட ஈழ மக்களின் உடல்நல சேவைக்காக ஜூன் 24 ஆம் தேதியன்று இலங்கை அரசுக்கு உலக வங்கி 2.4 கோடி டாலரைக் கடனாக அளித்துள்ளது.

போரில் அழிவுக்குள்ளாக்கப்பட்ட வட ஈழத்தின் சாலைகள், மின்சாரம், குடிநீர் ஆகிய மீள் கட்டுமானத்திற்காக வசந்தம் திட்டத்திற்கு 30 கோடி டாலர் கடனை ஆசிய வளர்ச்சி வங்கியானது ஜூலை 23 ஆம் தேதியன்று அளித்துள்ளது.

சீனாவின் பங்கு :

ஜூன் 5 ஆம் தேதியன்று சீனாவின் ஷென்யாங் நகரில் உள்ள China Shenyang International Economic and Technical Corporation (CSYIC) நிறுவனம் இலங்கைக்கு 50 கோடி டாலரை நீண்டகாலக் கடனாகக் கொடுப்பதாக அறிவித்தது. போரின்போது வன்னி மக்களை அழிக்கப் பெருமளவில் உதவிய சீனாவின் Chengdu FT-7 போர்விமானங்களை முதல் முதலில் வடிவமைத்தது இந்த நகரில் உள்ள ஷென்யாங் ஏர்க்ராஃப்ட் கார்ப்பரேஷன் நிறுவனமே.

மலிவு விலைக் குடியிருப்புகளை இலங்கை அரசின் அதிகாரிகளுக்குக் கட்டிக் கொடுப்பதற்காகவே இந்தக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. வன்னி நிலத்தில் மட்டுமே அடுத்த ஆண்டிற்குள் சுமார் இரண்டரை லட்சம் சிங்கள அதிகாரிகளும், அவர்தம் குடும்பத்தினரும் குடியமர்த்தப்படுவார்கள் என்று தெரிகிறது. அவர்கள் அனைவருக்கும் வீடு மற்றும் பிற வசதிகளை செய்து கொடுப்பதற்காகவே இந்தக் கடன் தொகையின் பெரும்பகுதி உபயோகப் படுத்தப்படவுள்ளது. முன்கூட்டியே வடிவமைத்துக் கட்டமைக்கப்பட்ட கட்டிடச் சுவர்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்து அவற்றைக் கொண்டு வன்னியின் சிங்கள இராணுவ முகாம்கள் கட்டப்படும் என்று தெரிகிறது.

இதற்குத் தேவையான 50% பொருட்களையும் தொழிலாளர்களையும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யவேண்டும் என்பது இந்தக் கடன் வழங்கப்படுவதற்கான முக்கிய நிபந்தனையாகும். ஆக, வரப்போகும் காலங்களில் வன்னி நிலமெங்கும் சீனர்களைப் பார்க்க முடியும்.

இந்தக் கடன் தொகையைத் தொடர்ந்து ஜூன் 29 ஆம் தேதியன்று சீனாவின் EXIM வங்கியானது சீனர்களால் நுரைச்சோலையில் கட்டப்பட்டு வரும் அனல் மின்நிலையத்திற்கு மேலும் 89 கோடி டாலர 20 வருடக் கடனாகக் கொடுத்துள்ளது.

அடுத்து என்ன ?

இலங்கை அரசின் வடக்கின் வசந்தம் திட்டமானது வட ஈழ மக்களை அவர்களது பாரம்பரிய நிலப்பகுதியிலிருந்து அந்நியப்படுத்தும் திட்டமேயன்றி வேறல்ல.

சிங்கள அரசின் இந்த வஞ்சகத் திட்டத்தில் இந்திய அரசு கலந்து கொள்ளக் கூடாது. அநீதியான இந்தத் திட்டத்திற்கு மாற்றாக வட ஈழ மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சாரத்தை மதிக்கும் மாற்றுத் திட்டம் ஒன்றினை தமிழ் மக்களும், இந்திய அரசும் முன் வைக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தை நிறைவேற்ற உதவிடும் சர்வதேச சக்திகளை எதிர்த்து உலக அளவில் இயங்கி வரும் மக்கள் இயக்கங்களுடன் இணைந்து இனிவரும் காலங்களில் தமிழ் அமைப்புகள் அனைத்தும் செயல்பட வேண்டும்.

---------------

Sunday, September 13, 2009

ராஜபக்சாவின் “வடக்கின் வசந்தம்” திட்டத்தில் கி.வீரமணி

மா_தவி


2009 ஜூலை 6 ஆம் தேதியன்று திரு.கி.வீரமணி அவர்கள் தஞ்சையில் உள்ள பெரியார் மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி ஒன்றைக் கொடுத்தார். அந்தப் பேட்டியில், “ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை நித்தம், நித்தம் கேள்விக்குறியாக உள்ளது. போர் முடிந்து 2 மாதங்கள் ஆகி விட்டது. விடுதலைப் புலிகளை எதிர்த்துத்தான் போர் புரிகிறோம். மக்களுக்க்கு எதிராக அல்ல என்று ராஜபக்சே கூறினார். விடுதலைப்புலிகளை முற்றிலும் அழித்துவிட்டதாகச் சொல்லும் ராஜபக்சே தங்களின் சொந்த இடங்களுக்குத் தமிழர்களைச் செல்ல விடாமல் ஆண்கள் வேறு, பெண்கள் வேறாகப் பிரித்து வைத்து இருப்பது ரத்தக் கண்ணீரை வரவழைக்கிறது. தமிழகப் பெண்களை சிங்கள ராணுவம் விபச்சாரம் செய்ய வற்புறுத்துகிறது என ஆஸ்திரேலிய பத்திரிகையில் செய்தி வருகிறது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகக் கொடுமைகள் எல்லையற்று சென்று கொண்டிருக்கிறது. அவர்களை எல்லாம் ச்சுதந்திரமாக செயல்படவிடாமல் அப்படியே 10,15 ஆண்டுகளுக்கு அடைத்து வைக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது” என்றார் .

இந்தப் பேட்டி வெளியான ஒரு வாரத்தில் - ஜூலை 15 ஆம் தேதியன்று - திரு.கி.வீரமணி அவர்கள் வேந்தராக உள்ள பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம் விழாக் கோலம் பூண்டிருந்தது. புது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கட்டுமானத் தொழில் வளர்ச்சிக் குழுமத்தின் (Construction Industry Development Council – CIDC) தலைமை இயக்குனரான திரு.பி.ஆர்.ஸ்வரூப் அவர்களை வரவேற்க அது காத்திருந்தது. சிவில், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் ஆகிய துறைகளில் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து டிப்ளமோ படிப்பினைத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தொடங்குவதற்கான ஒப்பந்ததத்தை CIDC அமைப்பு அன்றைய தினம் செய்து கொண்டது.

இதனை அடுத்த ஒரு வாரத்தில் - அதாவது ஜூலை 22 ஆம் தேதியன்று - வெளியான செய்தியானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவதாக இருந்தது. தஞ்சையில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்துடன் டிப்ளமோ படிப்பை வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்துகொண்ட அதே CIDC அமைப்பு இலங்கை அரசின் கட்டுமான மற்றும் பொறியியல் அமைச்சகத்துடன் ஒப்பந்தம் ஒன்றை செய்திருக்கின்றது என்ற செய்தியே அந்த அதிர்ச்சிக்கான காரணம். முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள வன்னி மக்களை வன்னி நிலத்தில் மீண்டும் குடியமர வைக்க இலங்கை அரசால் தீட்டப்பட்டுள்ள நயவஞ்சகத் திட்டமான “வட்டக்கின் வசந்தம்” திட்டத்தில் CIDC இணைந்து செயல்படுவதற்கு அந்த ஒப்பந்தம் அனுமதி வழங்கியிருந்தது.

முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் வன்னி மக்கள் படும் துன்பங்களை நினைக்கும் போதெல்லாம் ரத்தக் கண்ணீர் வருகிறது என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் கவலை தெரிவித்திருந்த திராவிடர் கழகத் தலைவரும், பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக்த்தின் வேந்தருமான திரு.வீரமணி, ஏனோ இலங்கை அரசுடன் தங்கள் பங்காளியான CIDC அமைப்பு கூட்டு சேர்ந்து கொண்டதை வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை.

CIDC என்ற இந்தியக் கட்டுமான நிறுவனங்களின் மெய்க்காப்பாளனும் அதன் சதியும் :

மத்தியத் திட்டக் கமிஷனானது இந்தியக் கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து CIDC என்ற அமைப்பினை 1996 ஆம் ஆண்டில் உருவாக்கியது. உலகமயமாதல் கோட்பாட்டின் செயல்பாடுகளால் 1990 -களில் பாதிப்புக்குள்ளாகத் தொடங்கியிருந்த இந்தியாவின் தனியார் கட்டுமான நிறுவனங்களைக் காப்பாற்றுவதே CIDC அமைப்பினை மத்தியத் திட்டக் கமிஷன் உருவாக்கியதற்கான முதண்மைக் காரணமாகும். இந்தியக் கட்டுமானத் துறையின் திறனை மேலை நாடுகளின் திறனுக்கு இணையாக மேம்படுத்துவதே CIDC யின் அடிப்படை நோக்கம். இந்த நோக்கத்தை செயல்படுத்துவதற்கான உத்வேகத்தையும், கட்டமைப்பு வசதிகளையும் அளிப்பதே CIDC யின் பணி.

இந்தியாவின் கட்டமைப்புத் துறை தொடர்பான அனைத்துக் கொள்கைகளையும் தீட்ட மத்திய அரசுக்கு அது உதவுகிறது.உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் இந்தியக் கட்டுமான நிறுவனங்களால் மேற்கொள்ளப் படுகின்ற கட்டுமான ஒப்பந்தங்களையும், வழிமுறைகளையும் நெறிமுறைப் படுத்துவதிலும் அது ஈடுபடுகின்றது. அந்த நிறுவனங்களுக்கு அவசியமான பணிநயம் மிக்கத் தொழிலாளர்களையும், இடைப்பட்ட தளத்தில் செயல்படுகின்ற நிர்வாகிகளையும் உருவாக்கும் பணியையும் அது மேற்கொள்கிறது. தொழிலாளர்களின் நலத்தைப் பேணும் திட்டங்களை உருவாக்கிக் கொடுக்கிறது. கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள இந்தியாவைச் சேர்ந்த அனைத்து ஒப்பந்தகாரர்களுக்கும் பாரபட்சமின்றி ஒப்பந்தங்கள் கிடைக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்தும் பணியையும் அது மேற்கொள்கிறது. கட்டுமானத் துறைக்கான நிதி தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதிப்படுத்தும் கொள்கைகளை அது மத்திய அரசிடம் சமர்ப்பிக்கின்றது. கட்டுமான ஒப்பந்தம் தொடர்பாக ஏற்படும் அனைத்துக் க்ருத்து வேறுபாடுகளையும் சமபந்தப்பட்ட எல்லாத் தரப்பினருடனும் பேசித் தீர்க்கும் மத்தியஸ்தப் பணியையும் அது மேற்கொள்கிறது. இந்தியக் கட்டுமான நிறுவனங்களுக்கு உதவும் கட்டுமான எந்திரங்களின் வங்கி ஒன்றினை அமைக்கும் பணியிலும் அது ஈடுபட்டு வருகிறது. சர்வதேச அளவில் புதிது புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் தொழில்நுட்பங்களையும், செயல்முறைகளையும் அறிந்துகொண்டு அவற்றை இந்தியக் கட்டுமானத் துறையினருக்குப் பயிற்சி அளிக்கும் நடவடிக்கையிலும் அது தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு இந்தியக் கட்டமைப்புத்துறையின் மெய்க்காப்ப்பாளனாக செயல்படுகின்ற CIDC தன் கல்விப் பணிகளை மேற்கொள்வதற்காக Construction Industry Professional Training Council (CIPTC) என்ற கல்வி அமைப்பை 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்படுத்தியது. இந்த அமைப்பானது 2002 ஆம் ஆண்டில் ”இந்திரா காந்தி திறந்த நிலைப் பல்கலைக் கழக்த்துடன்” இணைந்து ரூர்கி , புனே மற்றும் பெங்களூரு-வில் உள்ள இராணுவ மையங்களில் உள்ள இராணுவப் பணியாளர்களுக்கு சிவில், எலெக்ட்ரிக்கல் மற்றும் மெகானிக்கல் துறைகளில் டிப்ளமோ பட்டப் படிப்புகளை அளிக்கும் பயிற்சித் திட்டங்களை ஏற்படுத்தியது. அடுத்து ஹரியானா மாநிலத்தின் கட்டுமானத் துறையை மேம்படுத்துவதற்காக ஹரியானா மாநிலத்தின் தொழில்நுட்பக் கல்வி மையத்துடன் இணைந்து அந்த மாநிலத்தின் பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ மற்றும் உயர் டிப்ளமோ படிப்புகளை அது ஏற்படுத்தியது. தற்போது சர்வதேச அளவில் இந்த டிப்ளமோ படிப்புகளைக் கொண்டுசெல்லும் நோக்கத்துடன் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழக்த்துடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழிப் பட்டயப் படிப்புகளை அது உருவாக்கியிருக்கிறது. இந்தப் பட்டயப் படிப்புகளை இந்தியா முழுவதும் வழங்குவதற்காக பலநூறு பொதுத்துறை மற்றும் தனியார் கல்வி மையங்களை CIDC யானது பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வழிவகை செய்துள்ளது.

இந்தப் பட்டயப் படிப்புகளை இந்திய அளவில் எடுத்துச் செல்வது மட்டுமே CIDC யின் நோக்கம் அல்ல. சர்வதேச அளவில் இதனை உடனடியாக எடுத்துச் செல்வதுவே அதன் முக்கியக் குறிக்கோளாக இருக்கிறது. .

இந்தக் குறிக்கோளின் முதல் கட்டமாக இந்தப் பட்டயப் படிப்புகளை இலங்கைக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளில் CIDC இன்று ஈடுபட்டுள்ளது. 2009 ஆகஸ்டு 2 ஆம் தேதியன்று இலங்கை அரசின் கட்டுமானத்துறை அமைச்சகத்தின் கீழ் இருக்கும் Institute for Construction Training and Development (ICTAD) என்ற நிறுவனத்துடன் CIDC நிறுவனமானது புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பம் இட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது இந்தியக் கட்டுமான நிறுவனங்கள் இலங்கையின் கட்டுமான நிறுவனங்களுக்கு அதிநவீனக் கட்டுமானத் தொழில்நுட்பங்களை வழங்க வழி செய்யும். இந்தக் கூட்டுறவு முயற்சியை முன்னெடுத்துச் செல்ல நான்கு பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும். அதில் இரண்டுபேர் ICTAD நிறுவனத்தில் இருந்தும், இருவர் CIDC நிறுவனத்தில் இருந்தும் நியமிக்கப் படுவர். இந்தக் குழுவின் தலைவராக இலங்கை அரசின் கட்டுமான அமைச்சகத்தின் தலைமை அதிகாரியான நிசங்கா என்.விஜரெத்னெ இருப்பார்.

இந்த ஒப்பந்தமானது யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை மற்றும் வெள்ளவத்தை ஆகிய நகரங்களில் கட்டுமானத் துறையில் பங்கெடுப்பதற்குத் தேவையான நவீனப் பயிற்சிகளை வழங்கிடும் மையங்களை அமைத்திட CIDC-க்கு அனுமதி அளித்துள்ளது. இந்த மையங்களின் மூலமாக சுமார் 70 ஆயிரம் தமிழர்கள் இலங்கை அரசின் “வடக்கின் வசந்தம்” திட்டத்தின் கீழ் வன்னிப் பகுதியில் எடுக்கப்படவிருக்கின்ற கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மேஸ்திரி, சோதனைக்கூட ஆய்வாளர், கொத்தனார், தச்சர், குழாய்ப் பணியாளர், வெல்டர்களாக உருவாக்கப் படுவார்கள்.

ஆக, வன்னி நிலத்திறகான சிங்கள அரசின் “வடக்கின் வசந்தம்” திட்டத்திற்குத் தேவையான கூலிப் பட்டாளம் ஒன்றை வன்னியைத் தவிர்த்த ஈழத் தமிழ் மக்களில் இருந்து உருவாக்கிடும் முயற்சியில் CIDC ஈடுபட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில்தான் கடந்த ஜூலை 15 ஆம் தேதியன்று பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்துடன் CIDC ஒரு ஒப்பந்தத்தை செய்துகொண்டது. அந்த ஒப்பந்தத்திற்கான நிகழ்வில் பல்கலைக்கழக்த்தின் வேந்தரான திரு.கி.வீரமணி பின்வரும் கருத்துக்களைத் தெரிவித்தார்: “சிந்தனை செய்! கண்டுபிடி! மாற்று! என்பதே பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக்த்தின் குறிக்கோள்களாகும். சிந்தனை செய்வதற்கும், புதிய கண்டுபிடிப்புகளைப் புகுத்துவதற்கும், இதன் மூலம் சமூகத்தை மாற்றியமைப்பதற்கும் கட்டுமானப் பொறியியல் துறையானது நிறைய வாய்ப்பைக் கொடுக்கிறது”. அவர் கூறிய கருத்துக்களையே CIDC அமைப்பானது ராஜபக்சா அரசுடன் சேர்ந்து கொண்டு வன்னி நிலத்தில் இன்று செயல்படுத்தப் பார்க்கிறது என்பதுதான் வேடிக்கை!
CIDC யின் பாடங்களைத் தமிழில் தரும் இந்தியாவின் ஒரே பல்கலைக் கழகமாக உள்ள பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம் இந்த சதியில், தெரிந்தோ தெரியாமலோ, CIDC -யின் பின்னால் செல்லத் தொடங்கியிருக்கிறது.

CIDC இலங்கை அரசியலலுக்குள் நுழைந்த கதை :

சிங்கள இராணுவம் கிளிநொச்சியை 2009 ஜனவரி 2 ஆம் தேதியன்று ஆக்கிரமித்தது. கிளிநொச்சிக்கும் புதுக்குடியிருப்புக்கும் இடையில் உள்ள சாலையில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த அப்பாவி மக்களின் மீது அதன் பிறகு எறிகணை மழையை அது பெய்யத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கனக்கானோர் இந்தத் தாக்குதலுக்குப் பலியாயினர். இப்படிப்பட்ட தாக்குதல் அதிக அளவில் தொடர்ந்து கொண்டிருந்த பிப்ரவரி மாத இறுதியில் போருக்குப் பிந்தைய இலங்கையில் முதலீடு செய்வதை ஆராய்வதற்காக உயர்மட்டத் தொழில்துறைக் குழு ஒன்று சீனாவில் இருந்து இலங்கைக்கு வந்தது. சீனாவிடம் இருந்து மன்மோகன் சிங் அரசின் எதிர்ப்பை மீறி 2007 ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் ராஜபக்சா அரசால் வெற்றிகரமாக வாங்கப்பட்ட JY-11 என்ற சீன ராடார் சீனர்களாலேயே இயக்கப்படப்பட்டு வந்த மிரிகாமா நகரத்தை அந்தக் குழு பார்வையிட்டது. அந்த நகரமே தமது நிறுவனங்களை எதிர்காலத்தில் அமைப்பதற்கு உகந்த இடமாக இருக்கும் என்று அது அறிவித்தது.

அந்தக்குழு இலங்கையை விட்டு வெளியேறிய சில நாட்களுக்குள்ளாகவே - அதாவது மார்ச் 5 ஆம் தேதியன்று- இலங்கை அரசு சர்வதேச நிதியத்திடம் தனக்கு 190 கோடி டாலர் கடன் தேவை என்ற கோரிக்கையை முன் வைத்தது.

இந்த இரண்டு நிகழ்வுகளுமே இந்திய அரசை உஷார் படுத்தின. இலங்கையில் போர் முடிவுக்கு வரப்போவதையே அவை கட்டியம் கூறுவதாக இருந்தன. போருக்குப் பிந்தைய இலங்கையில் இந்தியா எப்படிப்பட்ட பணிகளை எடுக்க வேண்டும் என்ற விவாதங்கள் இந்திய அரசினால் இதன் பின்னரே முன்னெடுக்கப் பட்டன. அவ்வாறு முன்னெடுக்கப் பட்ட விவாதங்களில் CIDC முக்கியப் பங்கை ஆற்றத் தொடங்கியது.

”விடுதலைப் புலிகள் இயக்கத்தை முழுதுமாக அழிக்கும் இலங்கை அரசின் நடவடிக்கைகளின் பின்னால் உறுதியுடன் நிற்கும்” என்று ஏப்ரல் 22 ஆம் தேதியன்று சீன அரசு அறிவித்தது. அடுத்த நாளே இலங்கையின் நிலவரம் என்ன என்பதை அறிந்து வர எம்.கே.நாராயணனையும், சிவ சங்கர மேனனையும் இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பி வைத்தது. ”குழம்பிய இலங்கையில் ஆதாயம் தேடப் பார்ப்பதாக”ச் சீனாவின் மீது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஏப்ரல் 24 ஆம் தேதியன்று குற்றம் சாட்டினார். அதே தேதியன்று இலங்கைக்கு 100 கோடி ரூபாயை நிதி அளிப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு முன்பாக நடந்த விவாதங்கள் அனைத்திலும் CIDC கலந்து கொண்டது.

போர் முடிந்த ஐந்தாவது நாளில் - மே 23 ஆம் தேதியன்று - இலங்கைக்கான 100 கோடி ரூபாய் நிதியானது 500 கோடியாக உயர்த்தப்படுகிறது என்று இந்திய அரசு அறிவித்தது. முகாம்களில் உள்ள மக்களை மீள் குடியேற்றம் செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட இந்த நிதி குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன் நடந்த விவாதங்களிலும் CIDC முக்கியப் பங்கை ஆற்றியது.

சர்வதேச நிதியத்திடம் இருந்து மார்ச் மாதத்தின்போது இலங்கை அரசு கேட்டிருந்த 190 கோடி டாலர் நிதி உதவியை உடனடியாக வழங்க விடாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் மேற்குலக நாடுகளின் அரசுகள் ஜூன் மாதம் தொட்டு ஈடுபடத் தொடங்கின. இந்தத் தடையை நீக்கிக் கொடுத்தால் வன்னிப் பகுதியின் மீள் உருவாக்கத்தில் கலந்துகொள்ள இந்திய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதாக மன்மோகன் சிங் அரசிடம் ராஜபக்சா அரசு உறுதி அளித்தது.

ஜூன் இறுதியில் இருந்தே இதற்கான முயற்சியில் இறங்கிய மன்மோகன் அரசின் அழுத்தங்களுக்கு மேற்குலக அரசுகள் ஜூலை இரண்டாவது வாரம் வழி விட்டன. ஜூலை 15 ஆம் தேதியன்று எகிப்தில் நடந்த அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட மன்மோகன் சிங் அங்கு ராஜபக்சாவை சந்தித்தார். சர்வதேச நிதியத்தின் கடன் இன்னும் ஒரு வாரத்தில் இலங்கைக்கு அளிக்கப்படும் என்ற செய்தியை அவர் தெரிவித்தார். அந்த செய்தி வெளியான அன்றே வன்னிப் பகுதியின் மீள் உருவாக்கத்தில் இந்திய நிறுவனங்கள் கலந்து கொள்வதை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக ராஜபக்சா உறுதி கூறினார்.

ஜூலை 22 ஆம் தேதியன்று சர்வதேச நிதியத்தின் கடனுக்கான அனுமதி அறிவிக்கப்பட்டபோது, CIDC யும் இலங்கையின் கட்டுமான அமைச்சகமும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் உள்ள கட்டுமானத் திட்டத்தில் இந்திய நிறுவனங்கள் கலந்து கொள்வதற்கான அனுமதியைக் கொடுக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டன.

இப்படிப்பட்ட அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த CIDC அமைப்பே கூடுதலாகப் பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தைத் தன் 90 ஆவது உறுப்பினராக சேர்ப்பதற்கான பேச்சு வார்த்தையிலும் ஈடு பட்டு வந்தது. ஜூலை 15 ஆம் தேதியன்று அதில் வெற்றியும் அடைந்தது.

கி.வீரமணி அவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்ன ?

சமூக நீதியின் காவலரான பெரியார் அவர்களின் பெயரைத் தாங்கிய ஒரு நிறுவனமானது தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் இலங்கை அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கும் அமைப்பு ஒன்றின் உறுப்பினராக இருப்பதை சுய மரியாதை உணர்வு கொண்ட எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இலங்கை அரசு முன்வைத்திருக்கும் வடக்கின் வசந்தம் திட்டத்தில் கலந்துகொள்ளப்போவதாக ஜூன் மாதத்தில் விஞ்ஞானி திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் தடபுடலாகப் பேசினார். ஆனால் தமிழர்களுக்கு எதிராக அங்கு நிலவும் அநீதியான சூழ்நிலையை ”நாம் தமிழர் இயக்கம்” அவரிடம் எடுத்துரைத்த போது, , அதனை எவ்விதத் தன்முனைப்பும் இன்றி ஏற்றுக்கொண்ட அவர் “இலங்கையில் வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறைகள் மீண்டும் துரிதமாக மலருவதற்கு அங்குள்ள அரசியல் சூழ்நிலை சாதகமாக இல்லை. எனவே இலங்கையில் இணக்கமான சூழ்நிலை உருவாகும் வரை தமிழர்களை மீண்டும் வேளாண்மையில் ஈடுபடுவதற்கு தேவையான வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைகளை முன் வைக்கும் இந்தியத் தொழில்நுட்பக் குழுவில் நான் கலந்து கொள்ள மாட்டேன்” என்று ஆகஸ்டு 6 ஆம் தேதி பகிரங்கமாக அறிவித்தார்.

வேளாண் துறையில் வன்னிப் பெண்டிரைப் பயிற்றுவிப்பதே இந்திய அரசு அமைத்திருக்கும் வேளாண் தொழில்நுட்பக் குழுவின் நோக்கமாகும். கட்டுமானத் துறையில் 70 ஆயிரம் இளைஞர்களைப் பயிற்றுவிக்க ஆகஸ்டு 2 ஆம் தேதியன்று CIDC அமைப்பு இலங்கையின் ICTAD அமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தம் மேற்கூறிய வேளாண் தொழில்நுட்பக் குழுவைப் போன்றதொரு அமைப்பையே கட்டுமானத் துறையில் அமைக்கவிருக்கிறது. அந்த அமைப்பின் ஒரு அங்கமாகவே பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் உள்ளது .

இந்த சூழ்நிலையில் தலைவர் கி.வீரமணி அவர்களும் , பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகமும் கீழ்க்கண்ட கருத்துக்களை மனதில் கொள்ள வேண்டியது அவசியம் :

  • போரில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் வன்னி மக்கள் காணாமல் போயிருக்கிறார்கள். வன்னி மக்களுக்காகப் போரின்போது தன்னலம் பாராது உழைத்த மருத்துவர்கள் இன்று இலங்கை அரசால் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்கள்.
  • முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக இலங்கை அரசு மே 7 ஆம் தேதியன்று 19 பேர் கொண்ட குழுவொன்றை அமைத்துள்ளது. 1 லட்சத்து 40 ஆயிரம் வன்னி மக்கள் காணாமல் போனதற்குக் காரண்ம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள பலர் அந்தக் குழுவில் உள்ளனர். மேலும் அதில் உள்ளவர்கள் அனைவரும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களே. தமிழர் இல்லை.
  • ஆயிரக்கனக்கான ஆண்டுகளாகத் தமிழர் பூமியாக இருந்த வன்னிப் பெருநிலத்தில் 87 விழுக்காடு நிலம் அரசுக்கு சொந்தமானது என்று ராஜபக்சா அரசு தடாலடியாக அறிவித்துள்ளது. எனவே, அந்த நிலங்களில் சிங்கள இராணுவம், காவல்துறை, நிர்வாகம் மற்றும் அவர்தம் குடும்பத்தினரைச் சேர்ந்த சுமார் இரண்டரை லட்சம் பேரைக் குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை சீன நிதி உதவியுடன் இலங்கை அரசு அவசரமாக மேற்கொண்டு வருகிறது.
  • வன்னிப் பெருநிலத்தினை மேம்படுத்தும் வளர்ச்சித் திட்டங்களை அந்த நிலத்தில் காலங்காலமாக வாழ்ந்த மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கு இலங்கை அரசு உதவலாமேயொழிய எந்தவொரு திட்டத்தையும் மேலிருந்து திணிக்கக் கூடாது. இன்று CIDC மேற்கொண்டிருக்கும் திட்டம் வன்னி மக்களின் ஒப்புதலைப் பெறாமல் எதேச்சதிகார சிங்கள அரசால் மேலிருந்து திணிக்கப்படும் திட்டமேயன்றி வேறல்ல.


கி.வீரமணி அவர்கள் இனி செய்ய வேண்டியது என்ன?

டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனால் எடுக்கப்பட்ட முடிவைப் போலவே வன்னி மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கை அரசின் திட்டங்கள் எதிலும் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கலந்து கொள்ளக்கூடாது. மேலும் அதே முடிவினை CIDC யும் எடுக்க வேண்டும் என்று அந்த அமைப்பிடம் தலைவர் திரு.கி.வீரமணி அவர்கள் வற்புறுத்த வேண்டும்.

நீதிக்கான அந்த முடிவை ஏற்க CIDC அமைப்பு தவறினால் அந்த அமைப்பில் இருந்து (டாக்டர் சுவாமிநாதன் அவர்கள் வேளாண் தொழில்நுட்பக் குழுவில் இருந்து தன்னிச்சையாக விலகிக்கொண்டது போல) பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமும் விலகுவதாகப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

கூடுதலாக, CIDC யில் உறுப்பினர்களாக இருக்கும் அனைவரிடமும் தமிழர்களுக்கெதிரான CIDC யின் தவறான செயல்பாட்டினை எடுத்துரைக்கக் கி.வீரமணி அவர்களும், அவர்தம் பல்கலைக் கழகமும் முன்வர வேண்டும்.

தமிழ்நாட்டில் தொழில் மற்றும் வர்த்தக நலன்களைக் கொண்ட பல தனியார் நிறுவனங்கள் CIDCயின் உறுப்பினர்களாக உள்ளன. எடுத்துக் காட்டாக: L&T, Hindustan Construction Company, GVR Infrastructure Ltd., Maytas Infra Ltd., Afcons Infrastructure Ltd., Lanco Infra Ltd., DLF Universal Ltd, Shapoorji Pallonji Ltd., Som Dutt Builders Ltd., ACC Cements, Unitech, Tarapore&Co, SMS Infrastructures Ltd, Saint Gobain Glass India Ltd., SEW Construction Ltd., Umak Investment Ltd., IL&FS, HDFC, Builders Association of India (BAI) போன்ற கட்டுமானத்துறை சார்ந்த CIDC உறுப்பினர்கள் பலகாலமாக தொழில் செய்து வருகின்றனர்.

”தயை கூர்ந்து உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யாதீர்கள்” என்பதை அவர்களிடம் வலியுறுத்தி, ”CIDC அமைப்பானது இலங்கை அரசுடன் செய்துகொண்டிருக்கும் ஒப்பந்தத்தினைத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை செயல்படுத்தக் கூடாது” என்ற கோரிக்கைக்குத் தோள் கொடுக்க அவர்களிடம் கி.வீரமணி வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

தமிழ் இனத்தின் சமூக நீதிக்கான இந்த முடிவுகளைத் தலைவர் திரு.கி.வீரமணி அவர்கள் உடனடியாகக் கைகொள்ள வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நம் இனத்தை எதிரியின் அநீதிக்கான சதியில் மூழ்கடிக்கும் காலம் என்பதை அவர் உணர வேண்டும்.

-------------------------------------------------------------------------------------------

இந்திய அரசின் துக்ளக் வெளியுறவுக் கொள்கை - தவியிடம் அசரீரியின் நேர்காணல்

அசரீரி:

வணக்கம் தவி அவர்களே! இலங்கையில் இன்றைய நிலவரம் என்ன என்று கூறுவீர்களா?

தவி :

வதை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் நம் சொந்தங்கள் தினம் தினம் சந்தித்துக் கொண்டிருக்கும் அவலங்கள் பற்றி முன்பு ஊடகங்கள் அதிகமாக செய்தி வெளியிட்டு வந்தன. இன்று அவர்களை மீளக் குடியேற்றுவது பற்றிய செய்தியே அதிகம் செய்திகள் வருகின்றன.

முகாம்களில் உள்ள நம்மவர்கள் அன்றாடம் சந்திக்க வேண்டிய பிரச்சினைகள் இன்று கூடியிருக்கின்றனவே தவிர குறையவில்லை. முகாம்களில் உள்ள சுமார் 35 ஆயிரம் குழந்தைகளின் மத்தியில் இன்று மணல்வாரி அம்மை பரவத் தொடங்கியிருக்கிறது. நல்ல உணவையும், மருந்துகளையும் நாமும்,உலகம் முழுதும் உள்ள நம்ம் சொந்தங்களும், சர்வதேச நாடுகளும் அவர்களுக்குக் கொடுக்கத் தயாராக இருந்தாலும் அவற்றைப் பெற்றுக்கொள்ள இலங்கை அரசு வன்மத்துடன் மறுத்தே வருகிறது.

இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும், நம் சொந்தங்களை மீளக் குடியேற்ற அமைக்கப்பட்டிருக்கும் ( சிங்களர்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும் ) குழுவிற்கான தலைவருமான பசில் ராஜபக்சா ஜூன் 25 ஆம் தேதியன்று புது தில்லி வந்திருந்தார். ஐரோப்பாவில் இருந்து நம் சொந்தங்களால் வணங்கா மண் என்ற கப்பலில் அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களையும், மருந்துகளையும் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாக இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவிடம் அவர் அப்போது உறுதி அளித்திருந்தார். ஆனால் அந்த உறுதிமொழியை அவரது அரசு இன்றளவும் காப்பாற்றவில்லை. கடந்த ஒரு மாத காலமாக அந்தப் பொருட்கள் யாவும் கொழும்புத் துறைமுகத்தில் கேட்பாரற்று சீரழிந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் உணவும் மருந்துகளும்கூட தனக்கு அவசியமில்லை என்று இலங்கை அரசு தெரிவித்திருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. எனவேதான் அவை சென்னைத் துறைமுகத்தில் அனாதியாகக் கிடக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்று அந்தச் செய்திகள் கூறுகின்றன. இந்திய அரசின் கோரிக்கைகள் எதற்கும் செவிசாய்ப்பதில்லை என்ற முடிவுக்கு ராஜபக்சா அரசு போயிருப்பதையே இந்த நடவடிக்கைகள் யாவும் உணர்த்துகின்றன.

ஆனால் இன்றளவும் ராஜபக்சா அரசின் செயல்பாடுகளைக் கண்டிக்க இந்திய அரசு முன்வர மறுக்கிறது. தனது சொல்லுக்கு இலங்கை அரசு செவி சாய்ப்பது இல்லை என்று தெரிந்தும்கூட, இந்திய அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள ஏன் தயாராயில்லை என்பதுதான் எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும் செயலாக உள்ளது.

அசரீரி :

ராஜபக்சா அரசு இந்திய அரசை மதிப்பதில்லை என்று கூறுகிறீர்கள். ஆனால் ஜூலை 22 ஆம் தேதியன்று இந்தியக் கட்டுமான வளர்ச்சிக் குழுமத்துடன் (Construction Industry Development Council - CIDC) இலங்கை அரசின் கட்டுமான அமைச்சகம் வன்னிப் பெருநிலத்தின் அழிந்த கட்டிடங்களை மீண்டும் கட்டி எழுப்ப ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதே...

தவி :

நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் அந்த ஒப்பந்தத்திற்காக இந்திய அரசு எப்பேற்பட்ட காவடிகளையெல்லம் தூக்க வேண்டி வந்தது என்பதை நினைத்துத்தான் இன்று உலகமே சிரியாய் சிரித்துக் கொண்டிருக்கிறது .

போர் முடிந்த ஐந்தாவது நாளே 10 கோடி டாலர் நிதி உதவியை அளித்து ராஜபக்சா அரசைக் குளிர்விக்கும் பணியை இந்திய அரசு தொடங்கியது. அடுத்த கட்டமாக, மே 27 ஆம் தேதியன்று ஐ.நா.சபையில் உலக நாடுகளால் ராஜபக்சா அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டப் போர்க் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான கோரிக்கையை முறியடிப்பதில் சீன, பாகிஸ்தான் அரசுகளைவிடத் தான்தான் முன்னணியில் நிற்பதாக இந்திய அரசு இலங்கை அரசிடம் காண்பித்துக் கொண்டது. மேற்கத்திய நாடுகளால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கைக்கான சர்வதேச நிதியத்தின் கடன் தொகையை அரும்பாடு பட்டு, தன்னையே அமெரிகாவின் கைகளில் பிணையாக ஒப்படைத்து இன்று அது பெற்றுக் கொடுத்திருக்கிறது.

எகிப்து நாட்டில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டில் ஜூலை 15 ஆம் தேதியன்று ராஜபக்சாவை நம் பிரதமர் சந்தித்தபோது இதைத்தான் பட்டியல் போட்டுக் காண்பித்ததாகவும், அவர் கூறியதைப் போல சர்வதேச நிதியத்தின் கடன்தொகையைப் பெறுவதில் இலங்கை அரசு உண்மையாகவே வெற்றி பெற்றால் இந்தியக் கட்டுமான வளர்ச்சிக் குழுமத்திற்கு இலங்கையில் அனுமதி அளிப்பதாகவும் ராஜபக்சா கூறியதாக சொல்லிக்கொள்கிறார்கள். கூத்து அதோடு நிற்கவில்லை. ஜூலை 22 ஆம் தேதி தாய்லாந்தில் நடந்த ASEAN மாநாட்டில் கலந்துகொண்ட சீன வெளியுறவு அமைச்சரைப் பார்த்த உடனேயே நம் வெளியுறவு அமைச்சரான கிருஷ்ணா “பங்காளீ” என்றுபோய்க் கட்டிப் பிடித்து அங்குவந்திருந்த (சீனர்களைத் தம் ரத்த உறவாகப் பார்க்கும்) இலங்கை வெளியுறவு அமைச்சரைப் பரவசப் படுத்தியிருக்கிறார். மாநாட்டிலிருந்து திரும்பிய சில நாட்களிலேயே இலங்கைக்கு இன்னும் கூடுதலாகப் பணம் அளிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

அதாவது, வளையத்தைத் தாண்டினால் மட்டுமே இறைச்சி அளிக்கப்படும் என்று பழக்கப்படுத்தப்பட்ட சர்க்கஸ் சிங்கம் தன் ரிங் மாஸ்டரிடம் அந்த இறைச்சியைப் பெறுவதற்காக போடும் கூத்துகளைப் போலவே மன்மோகன் - ராஜபக்சா அரசுகளுக்கு இடையிலான காட்சிகள் இன்று நகர்ந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் இந்திய அரசைத் தவிர்த்து வேறு எவரும் ராஜபக்சாவைத் தம் ரிங் மாஸ்டராகப் பார்ப்பதில்லை. ராஜபக்சாவும், அவர்தம் மந்திரிமாரும் சீன அரசிடமும், மத்திய கிழக்கு நாடுகளின் அரசுகளிடமும் காட்டும் குழைவினைப் பார்க்கும்போது நமக்கே பலசமயம் கூச்சமாக இருக்கிறது.

ஜூன் 5 ஆம் தேதியன்று சீனாவின் ஷென்யாங் நகரில் உள்ள China Shenyang International Economic and Technical Corporation (CSYIC) நிறுவனம் இலங்கைக்கு 50 கோடி டாலரை நீண்டகாலக் கடனாகக் கொடுப்பதாக அறிவித்தது. போரின்போது நம் சொந்தங்களை அழிக்கப் பெருமளவில் உதவிய சீனாவின் Chengdu FT-7 போர்விமானங்களை முதல் முதலில் வடிவமைத்தது இந்த நகரில் உள்ள ஷென்யாங் ஏர்க்ராஃப்ட் கார்ப்பரேஷன் நிறுவனமே.


மலிவு விலைக் குடியிருப்புகளை இலங்கை அரசின் அதிகாரிகளுக்குக் கட்டிக் கொடுப்பதற்காகவே இந்தக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. வன்னி நிலத்தில் மட்டுமே அடுத்த ஆண்டிற்குள் சுமார் இரண்டரை லட்சம் சிங்கள அதிகாரிகளும், அவர்தம் குடும்பத்தினரும் குடியமர்த்தப்படுவார்கள் என்று தெரிகிறது. அவர்கள் அனைவருக்கும் வீடு மற்றும் பிற வசதிகளை செய்து கொடுப்பதற்காகவே இந்தக் கடன் தொகையின் பெரும்பகுதி உபயோகப் படுத்தப்படவுள்ளது. இந்தப் பணியை மேற்கொள்ளும்போது தேவைப்படும் உபகரணங்கள் மற்றும் தொழிலாள்ர்களில் 50% சீனாவில் இருந்து பெறப்படவேண்டும் என்பது இந்தக் கடன் வழங்கப்படுவதற்கான முக்கிய நிபந்தனையாகும். ஆக, வரப்போகும் காலங்களில் வன்னி நிலமெங்கும் சீனர்களைப் பார்க்க முடியும்.

இந்தக் கடன் தொகையைத் தொடர்ந்து ஜூன் 29 ஆம் தேதியன்று சீனாவின் EXIM வங்கியானது சீனர்களால் நுரைச்சோலையில் கட்டப்பட்டு வரும் அனல் மின்நிலையத்திற்கு மேலும் 89 கோடி டாலர 20 வருடக் கடனாகக் கொடுத்துள்ளது.

இது தவிர, ஜூலை 1 ஆம் தேதி இலங்கையின் மிரிகாமா நகரில் சீன நிறுவனங்களுக்கான சிறப்பு மண்டலம் ஒன்றை அமைக்க சீனாவின் Huichen Investment Holdings Ltd நிறுவனத்திற்கு ராஜபக்சா அரசு அனுமதி அளித்தது. போர் முடிவுக்கு வந்த பிறகு ராஜபக்சா அரசால் வெளி நாடுகளின் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும் முதல் அனுமதி இதுவே.

இந்த அனுமதி கொடுக்கப்பட்ட நாளில் இலங்கை அரசின் வெளியுறவு அமைச்சர் ரோஹிதா சீனாவில் நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். ஜூலை 2 ஆம் தேதியன்று China Institute of International Studies மையத்தில் “ போருக்குப் பிந்தய இலங்கை - நம் முன் உள்ள பாதை” என்ற தலைப்பில் பேசிய அவர் சீன நிறுவனங்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் ஜூலை 5 ஆம் தேதியன்று இலங்கைக்குப் போர் விமானங்களைக் கொடுத்து உதவிய செங்டு நகருக்கு சென்றார். அங்கு இலங்கை தூதரகத்தின் கிளை ஒன்றைத் திறக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் மேலாக இலங்கை அரசின் மத்திய வங்கியும், சீன வளர்ச்சி வங்கியும் மிக முக்கியமான உடன்படிக்கை ஒன்றில் ஜூலை 25 ஆம் தேதியன்று கையெழுத்திட்டுள்ளன.

இவற்றை எல்லாம் விரிவாக நான் கூறுவது எதற்கு என்றால், இதுதான் “இந்தியாவுக்கு வந்திருக்கும் சோதனை” என்று நாம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே.

மிரிகாமா என்ற பெயரை மட்டும் நம் சிவ சங்கர மேனனிடமோ, எம்.கே.நாராயணனிடமோ சொல்லிப் பாருங்கள்! அப்போது அவர்கள் எடுக்கும் ஓட்டம் ஒலிம்பிக் வீரர்களையும் கவலையடையச் செய்வதாக இருக்கும்.

சீனாவிடம் இந்தியா தோற்றுப் போனது இந்த மிரிகாமா நகரத்தில்தான். ஆச்சர்யமாக இருக்கிறதா?

2007 மார்ச் 26 ஆம் தேதியன்று வான்புலிகள் கட்டுநாயகா விமானதளத்தைத் தாக்கித் தங்களிடம் வான்படை இருப்பதை உலகுக்கு அறிவித்தார்கள். 2007 பிப்ரவரி 26 இல் இருந்து மார்ச் 4 வரை ராஜபக்சா மேற்கொண்டிருந்த சீனப் பயணமே சீனாவுடனான உறவில் திருப்புமுனையைக் கொடுத்தது. புலிகளின் விமானத் தாக்குதலை சாக்காக வைத்து இந்தியா தங்களுக்கு அளித்த ராடார் தமக்கு புலிகளின் விமானங்களைக் கண்டறிய உதவவில்லை என்று ராஜப்க்சா கும்பல் குறை கூறியது. இதற்குப் பதிலாக சீனாவிடம் இருந்து அதிநவீன ராடாரை வாங்கப்போவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பைக் கண்டு மிரண்டுபோன மன்மோகன் அரசு, உடனடியாக நாராயணன் - மேனன் குழுவை தூது அனுப்பியது. இவர்களின் சமாதானத்தை ராஜப்கசா கும்பல் ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசியில் அவர்கள் விருப்பத்திற்கேற்பவே சீனாவின் JY-11 ராடார் வாங்கப்பட்டு கொழும்பில் இருந்து வ்ட மேற்கே 44 கிலோமீட்டரில் உள்ள மிரிகாமா நகரில் நிறுவப் பட்டது.

இதில் விசேஷம் என்னவென்றால், இங்கு நம் நாட்டில் இன்று வரை 1987 ஆம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்தம் என்ற ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைப் பெரிதாகப் பேசுகிறார்கள். காங்கிரஸ் அரசு ஏதோ இந்த ஒப்பந்தத்தை இலங்கையில் நிலைநாட்டுவது போல பல சமயங்களில் பாவ்லா செய்கிறது. இருப்பினும் உண்மை இதற்கு மாறாகவே உள்ளது.

இந்த ஒப்பந்தம் தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்று கூறியது. ராஜபக்சா ஜனாதிபதியானதும் செய்த முதல் வேலை உச்ச நீதிமன்றத்தின் மூலம் அவ்விரண்டு மாகாணங்களையும் இருவேறாகப் பிளந்ததுதான்.

இலங்கையின் துறைமுகங்களையோ, விமான நிலையங்களையோ இந்தியா தவிர்த்த பிற நாடுகளுக்குக் கொடுக்கக் கூடாது. இலங்கை எல்லையில் பிற நாடுகளின் இராணுவத்தையோ, உளவுப் பிரிவையோ அனுமதிக்கக் கூடாது. ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தில் முன்வைக்கப்பட்டிருந்த இந்த ஷரத்துகளைத்தான் ராஜபக்சா ஜனாதிபதி பதவியைப் பிடித்ததும் ஒன்றன்பின் ஒன்றாக, நயவஞ்சகமாக உடைத்தெறிந்தார். இதில் மிரிகாமா ஒரு அத்தியாயம் என்றால், நுரைச்சோலை அனல் மின்நிலையம், மன்னார் வளைகுடாவில் சீனாவின் பெட்ரோல் துரப் பணி, அம்பாந்தோட்டைத் துறைமுகம் ஆகியவை பிற முக்கிய அத்தியாயங்களாம்.

நுரைச்சோலை அனல்மின்நிலையத்தின் பணி முதலில் இந்தியாவுக்குத்தான் கொடுக்கப்பட்டிருந்தது. 2005 ஆகஸ்டு மாதம் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா சீனா சென்றார். அந்தப் பயணத்தின்போது அன்று பிரதமராக இருந்த ராஜபக்சாவின் தூண்டுதலின் பேரில் நுரைச்சோலை அனல்மின்நிலையாத் திட்டம் ”இந்தியாவுக்கு இனி இல்லை; சீனாவுக்குத்தான்” என்று அதிரடியாக அறிவித்தார் . இந்த அதிரடி முடிவுக்கு மன்மோகன் அரசு எவ்வித எதிர்ப்பையும் காட்டவில்லை. மாறாக வருத்தத்தையே தெரிவித்தது. அதற்கு சமாதானமாக, திருகோணமலைக்கு அருகில் உள்ள சம்பூர் என்ற இடத்தில் வேண்டுமானால் நீங்கள் அனல் மின் நிலையம் அமைத்துக் கொடுங்கள் என்றது இலங்கை அரசு. இந்திய அரசும் மிகவும் பவ்யமாக அதனை ஏற்றுக் கொண்டது. இருந்தாலும், அந்தப் பணியும்ம் கூட இன்றுவரை துவங்க இயலாத சூழ்நிலையே தொடர்ந்து வருகிறது.

ராஜீவ் காந்தியவர்கள் மிகவும் விரும்பி மேற்கொண்ட ஒப்பந்தமே இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம். ஆனால் அவர் பெயரில் ஆட்சி நடத்திக்கொண்டிருந்த மன்மோகன் சிங் அரசு அதனைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை எபதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.

ராஜீவ் அவர்களின் ஒப்பந்தத்தை உடைத்தெறியும் சதியில் அமெரிக்கர்களை ராஜபக்சா கையாண்டவிதமும், அதில் மன்மோகன் அரசிற்கு ஏற்பட்ட பேரதிர்ச்சியும், இதனால் இந்திய மக்களுக்கு ஏற்பட்ட மாபெரும் பின்னடைவுமே இதன் உச்சபட்ச கிளமாக்ஸ்.

அசரீரி :

இலங்கையின் தலைவிதியைத் தாங்கள் சொல்வதைக் கேட்கும்போது மர்மக் கதையைக் கேட்பது போல இருக்கிறது. ஆனால் அதிர்ச்சியும் ஏற்படுகிறது.

சரி. அந்த அமெரிக்கக் கிளைமாக்சை சொல்லுங்களேன்.

தவி :

2007 பிப்ரவரி 26 இல் இருந்து மார்ச் 4 வரை ராஜபக்சா மேற்கொண்ட சீனப் பயணமே நான்காம் ஈழப்போரின் திசையைத் தீர்மாணித்த மிக முக்கிய முக்கிய நிகழ்வாகும். மேலும் இந்துப் பெருங்கடல் பிராந்தியத்தின் பூகோள அரசியலை புரட்டிப் போட எத்தணித்ததும் அந்தப் பயணமே.

இந்தப் பயணத்தின்போது அவர் அம்பாந்தோட்டைத் துறைமுகப் பணி, சேதுக் கால்வாய்க்கு மிக அருகில் அமைந்த மன்னார் வளைகுடாவின் பெட்ரோல் துரப்பணி ஆகியவற்றை சீனர்களுக்கு வாரி வழங்கினார். மேலும், இந்தியாவின் ஏர்டெல் நிறுவனத்தை இலங்கைக்குள் அழைத்து வந்து சுமார் 150 கோடி டாலர் மதிப்புள்ள கட்டமைப்புப் பணிகளை சீன நிறுவனமான ஹூவாவெய்-க்குக் கொடுக்க தனது அரசு ஏற்பாடு செய்ய்துள்ளதையும் சீன அரசிடம் அவர் தெரிவித்தது இந்தப் பயணத்தின் போதுதான். கூடுதலாக, இலங்கை அரசுக்கு சொந்தமான ஸ்ரீலங்கா டெலிகாமில் அங்கமாக உள்ள ஜப்பானிய நிறுவனமான NTT-யை வெளியேற்றிவிட்டு அதற்குப் பதில் சீன அரசுடன் நெருங்கியத் தொடர்பு கொண்ட மலேசியாவின் “மேக்சிஸ்” நிறுவனத்தை உள்ளே கொண்டுவருவதற்கும் தன் அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை சீன அரசிடம் தெளிவு படுத்தியதும் இந்தப் பயனத்தின் போதுதான்.

ராஜபக்சா அரசின் இந்த செயல்பாடுகளைப் பெரிதும் பாராட்டிய சீன அரசு அதற்கான பரிசையும் உடனடியாக அறிவித்தது. சீனாவின் ஆயுத நிறுவனமான நோரிங்கோவிற்கு இலங்கை அரசு கொடுக்க வேண்டியிருந்த 200 கோடி டாலர் கடனை அது உடனடியாகத் தள்ளுபடி செய்தது. மேலும், தனது அதிநவீன ஆயுத நிறுவனமான பாலிகுரூப்ஸ் நிறுனத்திடமிருந்து எவ்வளவு ஆயுதங்களை வேண்டுமானாலும் கொள்முதல் செய்துகொள்ள இலங்கை அரசுக்கு அது அனுமதி கொடுத்தது. மேலும் பல அதிநவீனப் போர் விமானங்களையும் அது இலங்கைக்கு இலவசமாக அளித்தது.

இவற்றையெல்லாம் இந்தியா ஏற்றுக்கொள்ளுமா? 1987 ஆம் ஆண்டின் ராஜீவ் ஒப்பந்தத்தை முன்வைத்து சண்டைக்கு வந்தால் என்ன செய்வது?

இந்தக் கேள்விகளுக்கான பதில் தெளிவாகவே இருந்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒழித்தேயாக வேண்டும் என்று இந்தியா முழு மூச்சுடன் இயங்கி வருவதால் இலங்கை அரசை அது அந்த இயக்கத்தை ஒழிக்கும் வரை எந்தக் கேள்வியும் கேட்காது. எனவே இந்திய அரசைப் பற்றி கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் அமெரிக்க அரசு இதனைக் கடுமையாக எதிர்க்க வாய்ப்பு இருக்கிறது. இந்திய அரசின் கடந்த காலத் தலையீடுகளால் இந்துப் பெருங்கடலில் கால் ஊன்ற முடியாமல் போன அமெரிக்க அரசு, அங்கு சீன அரசு காலூண்டுவதை எப்படி ஏற்றுக் கொள்ளும்?

2002 ஆம் ஆண்டில் அரசுக்கு சொந்தமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் 1070 பெட்ரோல் விநியோக மையங்களில் சுமார் 100 மையங்களை சீன அரசுக்கு சொந்தமான சினோபெக் (Sinopec) நிறுவனத்துக்குத் தாரை வார்க்கும் முயற்சியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஈடுபட்டார். அதே கால கட்டத்தில் இலங்கையில் அமெரிக்கப் போர்க் கப்பல்களுக்கும், போர் விமானங்களுக்கும் எரிபொருள் நிறப்ப, பழுது நீக்க அனுமதிக்கும் Acquisition and Cross Servicing Agreement (ACSA) என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான ரகசியப் பேச்சுவார்த்தைகளிலும் அவர் அமெரிக்க அரசுடன் ஈடுபட்டிருந்தார். மேலும், 1980 களில் இந்திரா அம்மையாராலும், ராஜீவ் காந்தியாலும் அமெரிக்கர்களுக்குத் தாரை வார்க்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்ட திருகோணமலைத் துறைமுகத்தையும், அதன் எண்ணைக் கொப்பரைகளையும் அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் ரகசியத் திட்டத்திலும் அவர் ஈடுபட்டிருந்தார். இந்த ரகசியத் திட்டங்களை வாஜ்பாயி தலைமையிலமைந்த இந்திய அரசு தெரிந்து கொண்டது. இலங்கை அரசின் இந்த கபடச் செயலை அது 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் வன்மையாகக் கண்டித்தது. இந்திய அரசு கொடுத்த அழுத்தங்களுக்கு அடிபணிந்து இலங்கை அரசு பின்வாங்கியது. திருகோணமலை எண்ணைக்கொப்பரைகளையும், சினோபெக்கிற்கு அளிக்கவிருந்த பெட்ரோல் விநியோக மையங்களையும் இந்தியாவின் “இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு” அது கைமாற்றிக் கொடுத்தது. மேலும் தலைமன்னாருக்குத் தெற்கே அமைந்துள்ள நுரைச்சோலையில் அனல் மின்நிலையம் ஒன்றை இந்தியா அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டது. அமெரிக்காவுடனான ACSA ஒப்பந்தத்த்ம் குறித்த நடவடிக்கைகளை அது தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

எனவே, அமெரிக்காவின் எதிர்ப்பைக் களைய வேண்டுமென்றால் 2002 ஆம் ஆண்டில் கிடப்பில் போடப்பட்ட ACSA ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். அவ்வாறு கையெழுத்திடும் செயலினை இன்று மன்மோகன் சிங் அரசினால எதிர்க்க முடியாது. ஏனெனில், இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற அது அமெரிக்க அரசின் தயவை எதிர்பார்த்து நின்று கொண்டிருக்கிறது. எனவே இந்தச் செயலானது, அமெரிக்க அதிர்ப்பை மட்டுப்படுதும் அதே நேரத்தில், நெருங்கி வந்து கொண்டிருக்கும் இந்திய அரசினை அந்நியப்படுத்தவும் உதவும்.

ராஜபக்சா 2007 மார்ச 5 ஆம் தேதியன்று தன் சீனப் பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பினார். திரும்பிய அதே தினம், அவரது தம்பியும், இலங்கைப் பாதுகாப்புத்துறையின் தலைவருமான கோத்தபாயா அமெரிக்கத் தூதர் ராபர்ட் பிளேக்குடன் ACSA ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இலங்கையில் அடுத்த பத்தாண்டுகளுக்கு அமெரிக்கப் பேர்க் கப்பல்களும், போர் விமானங்களும் வந்து போவதற்கான அனுமதி கிடைத்தது. அணுசக்தி ஒப்பந்தம் என்ற கடிவாளம் இடப்பட்ட மன்மோகன் அரசால் இவை அனைத்தையும் வாய்மூடி மௌனமாக வேடிக்கை பார்க்க முடிந்ததே தவிர வேறு ஒன்றையும் செய்ய முடியவில்லை.

அசரீரி :

சரி. அடுத்து நடந்தது என்ன?

தவி :

2009 ஏப்ரல் 22 ஆம் தேதி இந்தப் பிராந்தியத்தில் தன்னுடைய செல்வாக்கு வெகுவேகமாக சரிந்து வருவதை திடீரென்று உணர்ந்து கொண்டது. அந்தத் தேதியன்றுதான் இலங்கை அரசுக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தை முற்றுமுழுதுமாக அழிப்பதற்குத் தன் முழு ஆதரவு உண்டு என்பதை சீன அரசு அறிவித்தது.

அந்த அறிவிப்பைப் படித்த பிறகே இலங்கையில் ஏதோவொரு முக்கிய நிகழ்வு நடக்கப்போகிறது என்பதை மன்மோகன் சிங் அரசு உணர்ந்து கொண்டது. அடுத்த நாள் அகதி முகாம்களுக்கான தலைவராக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சந்திர ஸ்ரீ நியமிக்கப்பட்ட செய்தி வெளியாகியது. உடனடியாக நாராயணன் - மேனன் குழு இலங்கைக்கு அனுப்பப் பட்டது. அவர்கள் இலங்கையில் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த ஏப்ரல் 24 ஆம் நாள் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இலங்கைப் பிரச்சினையில் சீனா மேற்கொண்டுவரும் தலையீடு குறித்து முதல் முறையாகப் பேசினார். சீனாவின் நடவடிக்கைகளை தாம் கவனித்து வருவதாகவும், அவற்றை எதிர்கொள்ளும் திட்டம் தம்மிடம் இருப்பதாகவும் அறிவித்தார். ஆனால், அவரது அறிவிப்பால் போர்க்கள நிலவரம் எதுவும் மாற்வில்லை.

2009 மே 13 ஆம் தேதியன்று இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் முடிவுக்கு வந்தது. மே 17 ஆம் தேதியன்று தேர்தல் முடிவுகள் வெளிவரும் என்ற சூழ்நிலையில் மே 15 ஆம் தேதியன்று பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்கக் கடற்படைத் தளபதி அட்மிரல் கீட்டிங் இந்தியாவிற்கு வந்தார். அப்போது அவர் தெரிவித்த க்ருத்துக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைப்பதாக இருந்தது.

”இந்துப் பெருங்கடலில் பல பேர் இருப்பதற்கு இடமிருக்கிறது. சீனாவை எதிரியாகக் கருதும் மனோநிலையைக் கைவிட வேண்டும். அவர்களும் நம் பங்காளிகளே என்று நாம் வாழ்ப் பழகிக் கொள்ள வேண்டும்” என்றார்.

இதற்கு என்ன அர்த்தம்?

இதுநாள்வரை இந்துப் பெருங்கடல் இந்தியாவின் ஆளுமாஇயின் கீழ் இருந்து வந்தது. இனிவரும் காலத்தில் அமெரிக்கா, சீனா போன்றவர்களும் இங்கு இயங்குவர். அவர்களை இந்தியா பங்காளிகளாகவே கருத வேண்டும். அவ்வாறு கருதாமல், அவர்களை எதிரியாகக் க்ருத முயற்சித்தால் விளைவுகள் விபரீதமாகக் கூட மாற வாய்ப்புண்டு என்பதே அவர் இந்திய அரியணையில் அடுத்து அமரப் போகிறவர்களுக்கு அவர் மூலம் அமெரிக்க அரசு கூறிய அறிவுரை.

ஆக அமெரிக்க அரசானது இன்று பூனைகளுக்கு அப்பத்தைப் பிரித்துக் கொடுத்த குரங்கின் பாத்திரத்தை எடுத்துள்ளது. ஒருபுறம் சீனாவைப் பங்காளி என்று கூறி இந்தியாவின் தென் எல்லையை முற்றுகையிட அது சாத்தியப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் இந்திய அரசின் அச்சத்தை வளர்த்து, அதனைத் தன்னை நோக்கி வரச்செய்யும் உக்தியைக் கையாளத் தொடங்கியிருக்கிறது. அணுசக்தி ஒப்பந்தம் மூலம் இந்தியாவைக் கடிவாளம் இட்டு, சீனாவை முற்றுகை இடும் ஒரு அடிமையாக மாற்ற எத்தனித்திருக்கிறது.

இதற்கான நிகழ்வுகளே சமீபத்தில் நடந்தேறியுள்ளன. 2009 ஜூலை 9 ஆம் தேதியன்று இத்தாலியில் நடைபெற்ற வளர்ந்த 8 நாடுகளின் ( G8) மாநாட்டில் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தால் இந்திய – அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தைப் பாதிக்கும் தீர்மானம் ஒன்று நீறைவேர்றப்பட்டது. இந்தத் தீர்மணத்தின்படி, அணு ஆயுதப் பரவல் தடை சட்டத்தில் (NPT) கையெழுத்த்டாத நாடுகளுக்கு யுரேனியம் செரிவூட்டல், எரிந்து முடிந்த அணு எரிபொருளை மறுசுதிகரித்தல் ஆகியத் தொழில்நுடபங்களைக் கொடுக்கக் கூடாது.

அணுப்பொருள் விநியோகக் குழுமமானது (NSG) சென்ற வருடம் இந்தியாவிற்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிப்பதாக உறுதி கூறியிருந்தது. ஆனால், தற்சமயம் ஜி-8 நாடுகளால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்மானம் NSG அளித்த உறுதிமொழியை உடைத்தெறிவதாக உள்ளது.

ஜி-8 மாநாடு இப்படிப்பட்டதொரு முடிவினை எடுக்க அமெரிக்கா நிர்ப்பந்தம் செய்தது எதற்காக?

ஜூலை 18 தொடக்கம் இந்தியாவிற்கு அமெரிக்க அரசின் காரியதரிசி ஹில்லாரி கிளிண்டன் பயணம் மேற்கொண்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவை அமெரிக்கா மூன்று முக்கிய உடன்படிக்கைகளில் கையெழுத்திட நிர்ப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவிற்கு அமெரிக்கா விற்கும் அனைத்துத் தொழில்நுட்பங்களையும் அவை இராணுவப் பணிகளுக்குப் பயன்படுத்தப் ப்டுகின்றனவா என்பதைப் பரிசோதிக்க அமெரிக்கப் பரிசோதகர்களை இந்திய மண்ணிற்குள் அனுமதிக்க வேண்டும் என்ற் உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும் என்பதுதான் அம்மையாரின் இந்தியப் பயணத்தின் நோக்கம். மேலும் குஜராத்திலும், ஆந்திரத்திலும் அமெரிக்க நிறுவனங்களால் க்ட்டப்படவுள்ள தனியார் அணுமின் நிலையங்களில் விபத்து ஏற்பட்டு சுற்றியுள்ள மக்கள் பாதிக்கப் பட்டால் அவர்களுக்கு அந்த மின் நிலையங்களை நடத்திவரும் அமெரிக்கக் கம்பெனி நஷ்ட ஈடு கொடுக்கத் தேவ்வையில்லை என்பதை உறுதி செய்வதற்கான ஒப்பந்தம்.

இவ்விரு ஒப்பந்தங்களிலும் மன்மோகன் அரசு எவ்விதப் பேச்சுமின்றி கையொப்பம் இட்டிருக்கிரது. இதற்குக் கைமாறாகவே, இந்திய அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க அமெரிக்க அரசு இலங்கை அரசுக்கான சர்வதேச நிதியத்தின் கடனை எதிர்த்து வந்ததை வாபஸ் வாங்கிக் கொண்டது.

இந்தியாவின் இந்த நற்செயலைப் பாராட்டியே ராஜபக்சா அரசு ஜூலை 22 ஆம் தேதியன்று இந்தியக் கட்டுமான வளர்ச்சிக் குழுமத்துடன் வன்னிப் பெருநிலத்தின் அழிந்த கட்டிடங்களை மீண்டும் கட்டி எழுப்ப ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

எனவே, மன்மோகன் அரசு கடந்த ஐந்தாண்டுகாலத்தில் தனது தவறான நடவடிக்கைகளால் இந்தியாவையும், நம் ஈழத்து சொந்தங்களையும் ஒருபுறம் ராஜபக்சாவிடமும், சீனாவிடமும், அமெரிக்காவிடமும் அடகு வைத்திருக்கிறது. மறுபுறம், இந்தியாவை அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையைப் பிரதிபலிக்கும் அடிமையாக மாற்றப் போகும் அணுசக்தி ஒப்பந்தக் கடிவாளத்தைத் தனக்குத் தானே மாட்டிக் கொண்டிருக்கிறது. இவை இரண்டையும் நாம் உடைத்தெறியாத வரையில், நம் வாழ்வு நம் கையில் இல்லை என்பதுதான் உண்மை.

அசரீரி :

சரி. இதற்கு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா?

தவி :

இதனை சாத்தியமாக்குவதற்காகவே இந்தியத் தமிழர்களான நாம் அனைவரும் ஒன்று கூடவேண்டும். ஆனால், இன்றைய சூழ்நிலையில் மன்மோகன் அரசு மக்கள் சமூகத்திற்கு செவி சாய்க்கும் நிலைமையில் இல்லை.

எனவேதான், அநீதியை நிலைகொள்ளச் செய்யும் இந்திய அரசின் திட்டங்களுக்கு மக்களான நாம் ஒத்துழைப்புக் கொடுக்கக் கூடாது என்பதை உரத்துப் பேச வேண்டும்.

ஈழத்து சொந்தங்களைக் காக்க நாம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைப்போம் :

*

நான்காம் ஈழப் போரில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் வன்னி மக்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களுக்கு என்ன நேர்ந்தது, அதற்குக் காரணம் யார் என்பதைப் பாரபட்சமின்றி அறிந்திட சர்வதேச் குழு ஒன்று அமைக்கப் படல் வேண்டும்.

*

வன்னிப் பெருநிலத்தில் சிங்கள இராணுவம், காவல்துறை, நிர்வாகம் மற்றும் அவர்தம் குடும்பத்தினரைச் சேர்ந்த சுமார் இரண்டரை லட்சம் பேரைக் குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை சீன நிதி உதவியுடன் இலங்கை அரசு அவசரமாக மேற்கொண்டு வருகிறது. இவை நிறுத்தப்பட வேண்டும். வன்னியின் பாதுகாப்பு குறித்து அந்நில மக்களுடன் கலந்தாய்வு செய்த பின்னர் சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் அதற்கான நடவடிக்கைகளை சிங்கள அரசு எடுக்க வேண்டுமேயொழிய, தன்னிச்சையாக அது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நீதிக்கான செயல்பாடாக இருக்காது.

*

வன்னிப் பெருநிலத்தினை மேம்படுத்தும் வளர்ச்சித் திட்டங்களை அந்த நிலத்தில் காலங்காலமாக வாழ்ந்த மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கு இலங்கை அரசு உதவலாமேயொழிய மேலிருந்து திணிக்கக் கூடாது. எம்.எஸ்.சுவாமிநாதனின் வேளாண் மீள் திட்டமும், இந்தியக் கட்டுமான வளர்ச்சிக் குழுமத்திற்கு இலங்கை அரசால் கொடுக்கப்பட்டுள்ள மீள் கட்டுமானத்திற்கான அனுமதியும் மேலிருந்து மேலிருந்து திணிக்கப் படும் செயல்பாடுகளே. அவை வன்னி மக்களால் அங்கீகரிக்கப்பட்ட செயற்பாடுகளல்ல. .

*

முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக இலங்கை அரசு மே 7 ஆம் தேதியன்று 19 பேர் கொண்ட குழுவொன்றை அமைத்துள்ளது. 1 லட்சத்து 40 ஆயிரம் வன்னி மக்கள் காணாமல் போனதற்கு இவர்களே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள பலர் அந்தக் குழுவில் உள்ளனர். மேலும் அதில் உள்ளவர்கள் அனைவரும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களே. இந்தக் குழு உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக ஐ.நா.சபையின் தலைமையில் அனைத்துலகத்தையும் சேர்ந்த மனித உரிமை அமைப்புகளை உறுப்பினர்களாகக் கொண்ட அதிகாரத்தை உடைய மீள்குடியேற்ற செயற்குழு ஒன்று அமைக்கப்படவேண்டும்.

இவை அனைத்தையும் இந்திய அரசு ஏற்றுக் கொள்ளும்வரை இந்தியாவில் உள்ள எவரும், அவர் தனி மனிதரோ அல்லது ஒரு நிறுவனமோ, இந்திய அரசு இலங்கையில் மேற்கொள்ளப்போகிற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளக் கூடாது. மீறிக் கலந்து கொள்ள முடிவு செய்பவர்களை நாம் சமூக, பொருளாதார, அரசியல் வெளிகளில் ஒதுக்கும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

இந்திய அரசினை அமெரிக்க அரசின் வெளியுறவுக் கொள்கையைப் பிரதிபலிக்கும் அடிமையாக மாற்றிக் கொண்டிருக்கும் அணுசக்தி ஒப்பந்தததைத் தூக்கியெறியும் வெகுமக்கள் போராட்டத்தை நாம் உடனடியாகக் கைகொள்ளல் வேண்டும். அப்போதுதான், இந்திய அரசு ஒரு வேளை தன் இலங்கைக் கொள்கையை எதிர் காலத்தில் மாற்றிக் கொண்டால, அது சுதந்திரமாக செயல்படுவதற்கான சூழ்நிலை உருவாகி இருக்கும.


---------------------------------------------------------------------

Saturday, September 12, 2009

என்.ராம் - வெந்த பன்றியின் கதை

மா_தவி

1994 ஏப்ரல் 10 ஆம் தேதியன்று ஆங்கில நாவலாசிரியர் ஆர்.கே.நாராயணனின் மகள் ஹேமா மரணமடைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கீமோதெரபி சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். நோயைவிட சிகிச்சையே அவரைக் கடுமையாக பாதித்திருந்தது. “புற்றுநோய் அணுக்களை மட்டுமல்ல- உடலின் அனைத்து அணுக்களையும் தாக்கி அழிக்கின்ற கீமோதெரபி முறையை” நாராயணனால் ஜீரணிக்க முடியவில்லை. மகளின் இழப்பைத் தாங்க முடியாத அந்தக் கிழவர், நிகழ்விற்கு வந்திருந்த தன் நண்பரான இந்து என்.ராமிடம், “ பன்றியை வேக வைப்பதற்காக வீட்டைக் கொளுத்திவிட்டார்களே” என்று அழுது புலம்பினார்.

பன்றி குறித்த ஆர்.கே.நாராயணனின் அரற்றல் என்.ராமைக் கடுமையாகப் பாதித்தது. அதன் அர்த்தம் அவருக்கு விளங்கவில்லை. அதைக் கண்டறியும் கடுமையான முயற்சியில் அவர் ஈடுபட்டார். 1823 ஆம் ஆண்டில் “எலியாவின் கட்டுரைகள்” என்ற நூலில், சார்லஸ் லேம்ப் என்பவர் எழுதிய “வெந்த பன்றி குறித்த ஓர் ஆய்வு” என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த சீனப் பழங்கதை ஒன்றில் அதற்கான அர்த்தம் இருப்பதை அவர் கடைசியில் வெற்றிகரமாகக் கண்டு பிடித்தார்.

..........................

“முன்னொரு காலத்தில் சீன நாட்டின் கிராமம் ஒன்றில் பன்றிகளை ஒருவர் தன் வீட்டில் வளர்த்து வந்தார். ஒரு நாள், தன் மகனிடம் பன்றிகளைக் கவனிக்கச் சொல்லிவிட்டு வெளியூர் போய் விட்டார். அன்று இரவு வழக்கம்போலப் பன்றிகளை வீட்டில் அடைத்துவிட்டு சிறுவன் தூங்கப் போய்விட்டான். அதிகாலையில் யாரோ ஒருவன் வீட்டிற்குத் தீ வைத்து விட்டான்.

தீயைக் கண்ட பன்றிகள் ஓலமிட்டன. அலறி அடித்து எழுந்த சிறுவன் வீட்டைவிட்டு வெளியே ஓடினான். அவனது தந்தை அப்போதுதான் வெளியூரிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். எரிந்து கொண்டிருந்த வீட்டைக் கண்ட அவர் பதறி அடித்து ஓடி வந்தார். மகனுடன் சேர்ந்து தீயை அணைக்க முயன்றார்.. முடியவில்லை. பன்றிகள் அனைத்தும் தீயில் வெந்து மாண்டு போயின.

தீ தொடங்கிய உடனேயே பன்றிகளை ஏன் காப்பாற்ற முயற்சிக்கவில்லை என்று சிறுவனைத் தந்தை கடிந்து கொண்டார். அவனைக் கண் மண் தெரியாமல் அடிக்கத் தொடங்கினார். அடியைத் தாங்க முடியாமல் அவன் கீழே விழுந்தான். அவனது கை விரல் ஒன்று தற்செயலாக வெந்த பன்றி ஒன்றின் மீது பட்டது. பன்றியின் சூடு விரலைப் பதம் பார்த்தது. அலறினான். விரலின் எரிச்சலைக் குறைக்க அதனைத் தன் வாயில் திணித்துக் கொண்டான்.

என்ன காரணத்தினாலோ அவனது அழுகை திடீரென நின்று போனது. கீழே விழுந்து கிடந்தவன் துள்ளி எழுந்தான். தந்தையை நோக்கி ஓடினான். அவரைப் பார்த்து அவன் கூவினான்: “ அப்பா! வெந்த பன்னி ரொம்ப டேஸ்ட்டா இருக்குப்பா! நீயும் டேஸ்ட் பாரு!!”

அவரும் வெந்த பன்றிகளை சுவைத்துப் பார்த்தார். அந்த அற்புதச் சுவை பற்றி அவர் வெளியிட்ட செய்தி சீன நாட்டின் எட்டுத் திக்கும் பரவியது.
சுவையில் மயங்கிய சீனர்கள், பன்றிகளை வீட்டில் அடைத்தார்கள். வீடுகளுக்குத் தீ வைத்தார்கள். வெந்த பன்றியின் சுவையில் திளைக்கத் தொடங்கினார்கள்.”

-------------------------------------------

வெந்த பன்றியின் முழுக்கதையையும் என்.ராம் கண்டுபிடித்த போது அவர் பத்திரிகைத் துறையில் நுழைந்து 28 ஆண்டுகள் கழிந்திருந்தன. அந்தக்கதை அவருக்கு ஏதோவொரு முக்கியக் கருத்தினைக் கூறுவதாகப் பட்டது.

1966 ஆம் ஆண்டிலிருந்தே என்.ராம் தனது பத்திரிகைத்துறைப் பயணத்தைத் தொடங்கிவிட்டிருந்தார். இருப்பினும், 1980 ஆம் ஆண்டில் அவர் இந்து நாளிதளின் வாஷிங்டன் நிருபராகப் பணியாற்றியபோதுதான் அவரது செயல்பாடுகள் முதன் முதலில் வெளியில் தெரியத் தொடங்கின. 1982 ஆம் ஆண்டில் சர்வதேச நிதியத்துடன் இந்திய அரசு செய்துகொண்ட ரகசிய ஒப்பந்தத்தை வெளிக்கொண்டுவந்த அவரது பத்திரிகை செயல்பாட்டிற்குப் பெரியதொரு அங்கீகாரம் கிடைக்கவில்லை. 1984 ஆம் ஆண்டில் பிரண்ட்லைன் சஞ்சிகை தொடங்கப்பட்ட பின்னர் பல்வேறு அரசியல்வாதிகளுடனும், அதிகாரிகளோடும் சேர்ந்து அவர் இயங்கத் தொடங்கிய போதுதான் அவருக்கு சமூக அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது.

1978 ஆம் ஆண்டிலிருந்ந்து 1988 ஆம் ஆண்டுவரை ஏழு முறை சீனாவுக்கு சென்று வந்தார். சீனா குறித்து பிரண்ட்லைனிலும், இந்துவிலும் எழுதினார். என்றாலும்கூட, 1983 இல் வெடித்துக் கிளம்பிய இலங்கை இனப் பிரச்சினையில் அவர் தன்னை இணைத்துக் கொண்ட போதுதான் அவருக்கு அகில இந்திய மற்றும் தெற்கு ஆசியத் தளங்களில் முக்கியப் பத்திரிகையாளர் என்ற பெயர் முதன்முதலில் கிடைக்கத் தொடங்கியது. 1987 ஆம் ஆண்டில் கசியத் தொடங்கிய போபோர்ஸ் பீரங்கிப் பேர ஊழல் பிரச்சினையில் 1988-89 ஆம் ஆண்டுகளில் சித்ரா சுப்பிரமணியத்துடன் இணைந்து அவர் தகவல்களை இந்து நாளிதளில் வெளியிட்ட போது அவர் தெற்கு ஆசியாவின் நன்கு அறியப்பட்ட பத்திரிகையாளர்களில் ஒருவராக மாறிப் போனார்.

”அறிவார்ந்தவர், ஊழலுக்கு எதிரானவர்” என்ற படிமங்கள் அவரது பிம்பத்தோடு ஒட்டிக்கொண்டன. பத்திரிகைத் துறை சார்ந்த பரிசுகளும், 1990 ஆம் ஆண்டின் பத்ம பூஷன் பரிசும் இந்தப் படிமங்களை மேலும் உறுதி செய்தன.

“அடுத்து என்ன” என்ற கேள்வி அவரது மனதில் முழுமையாக நிறைந்து நின்றிருந்த இந்தக் காலகட்டத்தில்தான் ஆர்.கே.நாராயணனின் ”வெந்த பன்றி” அவரது வாழ்வில் குறுக்கிட்டது. அவரது மனதை அது தன்பால் ஈர்த்துக் கொண்டது. இருந்தாலும், அதனால் அவரது செயல்பாடுகளை மாற்றியமைக்க முடியவில்லை. அவரது செயல்பாடுகளை மாற்றி அமைக்க அது அடுத்த பத்து ஆண்டுகள் காத்திருக்க நேரிட்டது.

------------------------------------------

1994 ஆம் ஆண்டில் “பிசினஸ் லைன்” நாழிதள் தொடங்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் ஊடகவியலாளர் சசிகுமாருடன் இணைந்து “ ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம்” கல்லூரியை சென்னையில் தொடங்கினார். இந்த நிகழ்வுகள் அவரது தனிமனித வாழ்வில் முக்கியமானவை என்றாலும்கூட, பொதுவெளியில் அவருக்கிருந்த படிமத்தை மேலெடுத்துச் செல்ல அவை பெரியளவில் உதவவில்லை.

1980-களில் இலங்கை மற்றும் போபோர்ஸ் பிரச்சினைகள் வாயிலாக அவருக்குப் புகழ் குவிந்தது. அதே போன்றதொரு வாய்ப்பு 2002 ஆம் ஆண்டில் குஜராத் மதப் படுகொலையின்போது மீண்டும் கிடைத்தது. நரேந்திர மோடியின் மதவாதத்திற்கெதிராக அவர் காத்திரமாக எழுதியபோது அறிவார்ந்தவர் என்றும் ஊழலுக்கு எதிரானவர் என்றும் அறியப்பட்டிருந்த ராம் “மதவாதத்திற்கெதிரான மனிதாபிமானம் மிக்க பத்திரிகையாளராகவும்” உருமாற்றம் பெற்றார்..

2003 ஏப்ரலில் தமிழ்நாடு சட்டசபையானது, இந்து நாளிதளின் தலையங்கம் ஒன்றைக் கண்டித்து அதன் உயர்மட்ட நிர்வாகக் குழு மீது உரிமைப் பிரச்சைனையைக் கொண்டுவந்தது. சபையின் உரிமைக்கான குழுவிடம் இந்தப் பிரச்சினை விசாரணைக்கு அனுப்பப்பட்டது. நவம்பர் மாதம் முதல் வாரத்தில் அந்தக் குழு தன் பரிந்துரையை முன்வைத்தது. அதன் பேரில் இந்து நாளிதளின் முக்கியஸ்தர்களான என்.முரளி, மாலினி பார்த்தசாரதி, எஸ்.ரங்கராஜன், வி.ஜெயந்த் மர்றும் ராதா வெங்கடேசன் ஆகியோரைக் கைது செய்து 15 நாள் காவலில் வைக்கத் தமிழ்நாடு சட்டசபை உத்தரவிட்டது.

2003 ஏப்ரலில் தமிழ்நாடு சட்டசபை தொடர்பான பிரச்சினை உருவான பிறகே என்.ராம் இந்து பத்திரிகை நிறுவனத்தின் தலைவராக ஜூன் 27 இல் நியமிக்கப் பட்டார். நவம்பர் 7 இல் பிறப்பிக்கப்பட்ட சட்டசபையின் கைது உத்தரவை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றார். வெற்றியும் பெற்றார். பத்திரிகை சுதந்திரத்திற்கான போராளி என்ற படிமத்தை இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் பரிசாகப் பெர்றார்.

அறிவார்ந்தவர், ஊழலுக்கு எதிரானவர், மனிதாபிமானி, பத்திரிகை சுதந்திரத்திற்கான போராளி என்ற படிமங்களுடன் அவர் உலா வரத் தொடங்கியிருந்த அந்த காலகட்டத்தின்போதுதான் ஆர்.கே.நாராயணனின் அரற்றலின் ஊடாக ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக வெளியாயிருந்த “வெந்த பன்றியின் கதையானது” என்..ராமின் செயல்களின் ஊடாகத் தன் சுவையை இந்தியாவிற்குள்ளும் பரப்பத் தொடங்கியிருந்தது.

-----------------------------------------------------------

2003 ஜூன் 27 ஆம் தேதியன்று இந்து குழுமத்தின் தலைவராக என்.ராம் நியமிக்கப்பட்டார். இந்து நாளிதளின் அன்றைய தினத் தலையங்கம் பத்திரிகைத் துறையின் அறம் பற்றியதாகவும், இந்து நாளிதளின் கொள்கையை விளக்குவதாகவும் இருந்தது.

“ செய்தி அறிக்கைகள், செய்தி ஆய்வுகள், (நிகழ்வு குறித்த) கருத்துகள் என்ற மூன்று வகை எழுத்துக்கள் உள்ளன. இவைகளுக்கிடையில் உள்ள வேறுபாடுகளை இன்றுள்ள பெரும்பாலான செய்தித்தாள்கள் கண்டுகொள்வதில்லை; “ஆசிரியரின் கருத்துக்களையே செய்தி அறிக்கைகளாக வெளியிடும் போக்கே மேலோங்கி நிற்கிறது. இந்து நாளிதளும் இந்த “ஆசிரியக் கருத்தை செய்தி அறிக்கையாக வெளியிடும்” கிருமியால் பாதிப்புக்கு உள்ளாகித்தான் இருந்தது; இந்தப் போக்கைக் களைந்து, மேற்கூறிய எழுத்து வகைப்பாடுகளுக்கிடையிலான எல்லலையைக் கறாராக வரையறுத்து, நாளிதளின் வெளிப்பாட்டை பருண்மையான மற்றும் யதார்த்தமான ஒன்றாக மாற்றி அமைப்பதற்கு இந்து உறுதி பூண்டுள்ளது” என்று அந்தத் தாலையங்கம் அறிவித்தது..

” பத்திரிகைத் தொழிலானது சமூக நன்மைக்காகத்தான் செயல்படுகிறது என்று சொல்லிக்கொள்ளவேண்டுமென்றால் ஆட்சி அதிகாரத்தை மாற்றுகிறோம் என்ற போர்வையில் பரந்துபட்ட மக்களின் மீது அதிநவீன ஆயுதங்களைக் கொண்டு மரணத்தையும், தந்தோன்றித்தனத்தையும், குழப்பத்தையும் மழையாகப் பொழியும் செயல்பாடுகள் குறித்த தெளிவான நிலைப்பாட்டை அது எடுக்க வேண்டும்” என்றும் அந்தத் தலையங்கம் கூறியது.

ஆனால், திபெத் குறித்து 2000, 2007 மர்றும் 2009 ஆம் ஆண்டுகளில் என்.ராமால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களும், கட்டுரைகளும் இந்தத் தலையங்கத்தில் வெளியிடப்பட்ட கருத்துகளுக்கு நேர் எதிராகவே இருந்தன.

-------------------------------------------

2000 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின்போது திபெத்துக்குள் ஐந்து நாள் பயணம் செய்யும் வாய்ப்பை இந்து ராமிற்கு சீன அரசு ஏற்படுத்திக் கொடுத்தது. தனது பயணம் குறித்த கட்டுரையை செப்டம்பரில் பிரண்ட்லைன் இதழில் அவர் வெளியிட்டார். இந்தக் கட்டுரை சீன அரசை வெகுவாகக் கவர்ந்தது. இதன் காரணமாக மீண்டும் 2007 ஜூன் மாதத்திலும், 2009 பிப்ரவரியிலும் என்.ராமிற்கு திபெத்தைப் பார்க்கும் வாய்ப்பை சீன அரசு உருவாக்கிக் கொடுத்தது. திபெத் குறித்து அவரால் எழுதப்பட்ட கட்டுரைகள் யாவும் வெந்த பன்றியின் சுவையைத் தற்செயலாக அறிந்து கொள்ள நேரிட்ட சிறுவன் தன் தந்தையை நோக்கி மகிழ்ச்சியில் கூவியதையே நினைவு படுத்துவதாக இருந்தது.

--------------------------------------------------------------

திபெத்தை ஆக்கிரமித்துள்ள சீன அரசிற்கு எதிராக 1959 ஆம் ஆண்டில் வெடித்தெழுந்த திபெத் மக்கள் எழுச்சியின் 50 வது ஆண்டு தினம் 2009 மார்ச் 10 ஆம் தேதியாகும். அந்த நாளுக்கு சில நாட்கள் முன்னதாக திபெத்தை சீன அரசு எவ்வாறெல்லாம் வளப்படுத்தியிருக்கிறது என்ற என்.ராமின் கட்டுரை இந்து நாளிதளில் வெளியிடப்பட்டது.

சீன அரசின் பராக்கிரமத்தையும், விவேகத்தையும் அந்தக் கட்டுரை பாராட்டுகிறது. ஆனால், சீன அரசின் ”வளப்படுத்தும் செயல்பாடுகள்” குறித்து திபெத் மக்கள் எப்படிப்பட்ட கருத்தினைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய அவர் எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லை. கட்டுரையில் அவரால் வெளியிடப்பட்ட தகவல்கள் யாவும் திபெத்தை 60 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருக்கும் சீன அரசின் அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்டவையே.

1959 ஆம் ஆண்டின் திபெத் மக்கள் எழுச்சியின்போது 86 ஆயிரம் திபெத் மக்கள் கொல்லப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான மக்களும், பிக்குகளும் பொது இடங்களில் வைத்து சீன இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 1953-1964 காலகட்டத்தில் திபெத்தில் சுமார் 9 லட்சம் பேர் காணாமல் போயினர். அவர்களில் பெரும்பாலானோர் சீனச் சிறைகளில் அடைக்கப்பட்டு மரணத்தைத் தழுவியிருக்கக் கூடும் என்பது 10 வது பஞ்சென் லாமாவின் கருத்து.

திபெத்திற்குள் சீனர்களின் குடியேற்றம் நடைபெறவில்லை என்று என்.ராமின் 2007 ஆம் ஆண்டின் கட்டுரைகள் வாதிடுகின்றன. ஆனால் உண்மை அதற்கு நேர் மாறாகவே உள்ளது.

திபெத்தின் சுயாட்சியை இந்திய அரசு அங்கீகரிக்குமேயானால், கோவா மற்றும் சிக்கிமின் சுயாட்சிக்கான குரலையும் அங்கீகரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அது தள்ளப்படும் என்ற மறைமுக எச்சரிக்கையையும் அவரது கட்டுரைகள் வைக்கத் தவறவில்லை.

---------------------------------------------------------

திபெத் பற்றிய செய்திகளை வெளியிடுவதில் என்.ராம் சீன அரசு சார்பாகவே செயல்படுகிறார். சீன அரசின் செய்தி நிறுவனமான “ஜின்ஹூவா” வெளியிடும் செய்திகளை மட்டுமே அவர் நம்புகிறார். மாற்றுத் தகவல்களை அவர் கண்டுகொள்வதில்லை. சீன அரசிற்கான பிரச்சாரத்தைத் தவிர வேறு எதையும் செய்யத் துணியாத ஜின்ஹூவா செய்தி நிறுவனத்தின் பிரச்சாரச் செயல்பாடுகள் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை “எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் இயக்கம்” 2005 ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியிட்டது. ஆதாரப்பூர்வமான அந்த அறிக்கை வெளியான பின்னரும் கூட இந்து ராம் “ஜின்ஹூவா” செய்தி நிறுவனத்தைத் தூக்கிப் பிடிப்பதைக் கைவிடவில்லை.

உலக பௌத்தர்களின் கூட்டம் சீனாவில் 2006 ஏப்ரலில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சீன அரசால் திபெத் மக்களுக்கான மதத் தலைவர் என்று நியமிக்கப்பட்ட ”பஞ்சென் லாமா” கலந்து கொண்டார். அவரை திபெத் மக்கள் “பஞ்சென் ஜூமா” என்றே அழைக்கிறார்கள். அதற்கு ”போலி மதத் தலைவர்” என்பதே பொருள். . தலாய் லாமா அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சென் லாமாவான கெண்டுன் நியாமா-வையே திபெத் மக்கள் தங்களின் உண்மையான மதத் தலைவராகக் கருதுகிறார்கள். இந்தத் தகவலை “டைம்ஸ் ஆஃப் இந்தியா”வின் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியான செய்தி அறிக்கை வெளிப்படுத்தியது. ஆனால் அதே தேதியில் இந்துவில் சீன அரசினால் திபெத் மக்களின் மதத் தலைவராக நியமிக்கப்பட்ட பஞ்சென் லாமாவை மட்டுமே குறிப்பிட்டுப் பேசும் “ஜின்ஹூவா” நிறுவனத்தால் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையே வெளியானது. உண்மையான “பஞ்சென் லாமா” பற்றி இந்து நாளிதள் வாய் திறக்கவில்லை.

---------------------------------------------------

1989 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் சீன நாட்டின் தலைநகரான பீஜிங்கின் தியானென்மென் சதுக்கத்தில் அரசின் கொள்கைக்கு எதிராக மக்கள் போராட்டம் தொடங்கியது. 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட அந்தப் போராட்டத்தை ஜூன் 3 ஆம் தேதிக்குள் சீன அரசு கொடுங்கரம் கொண்டு அடக்கியது. இந்த அடக்குமுறைச் செயலில் சுமார் 2500 பேர் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தப்பட்னர். வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் சீனாவில் தடை செய்யப்பட்டன. போராட்டத்துக்கு ஆதரவாக இருந்த கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் வாழ்நாளுக்கும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

1990 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தின்போது சீன அரசினால் கடைப்பிடிக்கப்படும் மனித உரிமை மறுப்புக் கலாச்சாரம் குறித்த செய்திகளை வெளியிடுவது மேற்குலக ஊடகங்களின் வழக்கமாக இருந்து வருகிறது. 2006 ஆம் ஆண்டில் சுமார் 10 கோடி பேரை உறுப்பினர்களாகக் கொண்ட சீன நாட்டின் ஃபாலுன் காங் மதப் பிரிவினர் எவ்வாறு சீன அரசால் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பது குறித்த ஆய்வறிக்கை ஒன்று கனடா நாட்டின் மனித உரிமை வழக்கறிஞர் டேவிட் மத்தாஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டேவிட் கில்கூர் ஆகியோரால் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான ஃபாலுங் காங் மக்களின் உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு எவ்வாறு அவை பிறருக்கு சீன அரசால் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறித்த தகவல்களை அது முன்வைத்தது. இது குறித்த செய்தியை 2006 ஏப்ரல் 19 ஆம் தேதி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டது. அதுபோலவே, ஏப்ரல் 20 ஆம் தேதியன்று AFP செய்தி நிறுவனம் உலகத்திலேயே மரணதண்டனை அதிகம் விதிக்கப்படும் நாடு சீனாவே என்ற செய்தியை வெளியிட்டது.

இந்த இரண்டு செய்திகளையும் இந்து நாளிதளில் வெளியிட என்.ராம் முன்வரவில்லை. மாறாக, இந்த செய்திகளைப் பிற செய்தித்தாள்கள் வெளியிட்ட அதே நாட்களில் சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு சென்று, “நான் மைக்ரோசாஃப்ட்டின் நண்பன்” என்று கூறியது குறித்த செய்தி ஒன்றை அவர் வெளியிட்டார். ஏப்ரல் 15 ஆம் தேதியன்று உலகமே வியந்து பார்க்கும் மிகப் பெரிய சீன அணை மற்றும் சந்தைக் கட்டிடம் ஒன்றைக் குறித்து சீனாவின் இந்து நிருபரான பல்லவி ஐயர் எழுதிய கட்டுரையையும் அவர் வெளியிட்ட்டார். பல்லவி ஐயரால் எழுதப்பட்ட சீனாவில் உள்ள சிவப்பு டர்பன் சீக்கியர்களைப் பற்றிய ஒரு கட்டுரையை மே மாதத்திலும், அவராலேயே எழுதப்பட்ட திபெத்திற்குள் செல்லும் ரயிலைப் பற்றிய கட்டுரை ஒன்றை ஜூலையிலும் அவர் வெளியிட்டார். தெற்கு ஆசிய ஆய்விற்கான சீனக் கூட்டமைப்பின் தலைவரான முனைவர். யோங்குய் என்பவரின் கட்டுரை ஒன்றையும் அவர் ஜூன் மாதத்தில் வெளியிட்டார்.

சீன அரசினை உலக மேம்பாட்டிற்கான அரசு என்று அறிவிக்கும் செய்திகளையும், கட்டுரைகளையும் மட்டுமே வெளியிட வேண்டும் என்ற ( பத்திரிகைத் தொழில் அறத்திற்கு முரணான ) தணிக்கைக் கோட்பாட்டை என்.ராம் கொண்டிருப்பதையே அவரின் இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன. திபெத்தின் மீதும், பிற சிறுபாண்மையினரின் மீதும், அரசியல் எதிர்ப்பாளர்கள் மீதும் சீன அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கிற ஒடுக்குமுறை நடவடிக்கைகள் குறித்த செய்திகளோ, ஆய்வறிக்கைகளோ மக்களை சென்றடையக் கூடாது என்ற தணிக்கை மனதையே அவர் கொண்டுள்ளார் என்பதையே அவரின் மேற்கூறிய ந்டவடிக்கைகள் தெளிவாக்குகின்றன.

2003 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதியன்று இந்து குழுமத்தின் தலைவராக நியமிக்கப்பட்டபின் அவர் எழுதிய முதல் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்த “ஆசிரியக் கருத்தை செய்தி அறிக்கையாக வெளியிடும்” கிருமியால் அவர் கடுமையாகப் பாதிக்கப் பட்டிருப்பதையே அவரின் மேற்கூறிய நடவடிக்கைகள் எடுத்து இயம்புவதாக உள்ளன.

-----------------------------------------------

2000 ஆம் ஆண்டிலிருந்து திபெத் குறித்தும், சீனா குறித்தும் என்.ராமுக்குக் கிடைத்த பத்திரிகைத் துறை அனுபவங்கள், இலங்கைப் பிரச்சினையை எவ்வாறு தன் பத்திரிகைகளில் கையாள வேண்டும் என்ற கோட்பாட்டை அவருக்கு வகுத்துக் கொடுத்திருக்கின்றன.

நடந்து முடிந்த போரில் இலங்கை அரசால் வன்னி மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி குறித்து மேற்குலகப் பத்திரிகைகள் விரிவாக எழுதிக் கொண்டிருக்கும் வேளையில், என்.ராமுக்கு அந்த அநீதிகள் கண்களில் படவில்லை.

2008 ஏப்ரலில் இருந்த 4 லட்சம் வன்னி மக்களில் இன்று 2 லட்சத்து 80 ஆயிரம் பேருக்குதான் கணக்கிருக்கிறது. 14 மாத காலத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை. முகாம்களில் அடைக்கப்பட்ட வயதுக்கு வந்த ஆண்களனைவரையும் தனிப்பட்ட வதை முகாம்களில் அடைக்கும் திட்டத்தில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கிறது. பெண்களையும், குழந்தைகளையும் மட்டுமே மீளக் குடியமர்த்தப் போகும் திட்டங்களை அது முன்னெடுத்து வருகிறது. அவர்களை வணிக நிறுவனங்களின் விவசாயக் கூலிகளாக மாற்றும் திட்டத்ததையும் அது தீட்டி வருகிறது. வன்னி நிலப்பகுதியை மேம்படுத்துவதற்கான 18 பேர் அடங்கிய செயற்குழுவில் ஒருவர் கூடத் தமிழர் இல்லை. இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகளும், நிர்வாக அதிகாரிகளும் மட்டுமே அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இப்படிப்பட்ட குழுவுடன் இணைந்து வன்னிப் பெண்களை வணிக நிறுவனங்களுக்குக் கீழ் வேளாண் நில்ங்களில் மீளக் குடியமர்த்தும் திட்டங்களுக்கு இந்திய வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதனின் துணையை இலங்கை அரசு நாடியுள்ளது. அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்து விட்டார். இந்த செயல்பாடுகளுக்காக இந்திய அரசு மே 23 ஆம் தேதியன்று 500 கோடி ரூபாய் நிதி உதவியை அறிவித்திருக்கிறது.

வன்னிப் பெருநிலம் இன்று கடுமையான இராணுவமயமாக்கலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. அங்கு 12 இராணுவ டிவிஷன்கள் நிறுத்தப்படவிருப்பதாக லெப்.ஜெனரல் ராகவன் சமீபத்தில் தெரிவித்திருக்கிறார். இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப்படை மூன்று டிவிஷ்ன்களை மட்டுமே கொண்டிருந்தது என்பதைக் கோடிட்டுக் காட்டிய அவர், வன்னியில் நிறுத்தப்படவிருக்கிற 12 டிவிஷன்களின் 84 ஆயிரம் சிங்கள இராணுவ வீரர்களால் இராணுவ நகரங்கள் பல உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்றார். இராணுவம் தவிர, சிங்களர்களைக் கொண்ட காவல்துறையும் அங்கு உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.சமீபத்தில் இந்தோனேசியாவிற்கு சென்றிருந்த இலங்கை அதிபரின் ஆலோசகரான பசில் ராஜபக்சா, அந்த நாட்டின் தொழில் அதிபர்களை வன்னியின் வேளாண் துறையில் பெண்களை முக்கியமாக வைத்து உருவாக்கப்படவிருக்கிற “ஒப்பந்த விவசாயத்தில்” ஈடுபட அழைப்பு விடுத்திருக்கிறார். தென் இலங்கையில் சிறையில் உள்ள 30 ஆயிரம் ஆண் சிங்களக் கைதிகளை வன்னியில் குடியமர்த்தும் திட்டம் உள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இப்படி வன்னிப் பெண்களையும், சிறுவர்களையும் அவர்களை விட அதிக எண்ணிக்கையில் உள்ள இராணுவத்தினர், காவல் மற்றும் நிர்வாகத் துறையினர், சிங்களச் சிறைக் கைதிகள், உலக அளவில் நலன்களைக் கொண்டுள்ள வணிக நிறுவனங்கள் மத்தியில் மீளக் குடியமர்த்திவிட்டு, அவர்களின் மத்தியில் தேர்தலை நடத்தி, பிரதேச அரசியல் சபைகளை 13 ஆம் சட்டத் திருத்தத்தின்படி உருவாக்கும் இலங்கை அரசின் அகோர அரசியல் நாடகத்தை ”அற்புதம்” என்று என். . ராம் பாராட்டியிருக்கிறார்.

ஜூன் 30 ஆம் தேதியன்று இரவு உணவிற்குப் பிறகு அவருக்கு இலங்கை ஜனாதிபதி அளித்த சிறப்பு நேர்காணலை அவர் இந்து நாளிதளில் வெளியிட்டது எதைக் குறிக்கிறது?

தன் மகளின் மரணத்தின் போது புலம்பலினூடாக ஆ.கே.நாராயணனால் என்.ராமிடம் சொல்லப்பட்ட ”வீட்டைக் கொளுத்தி பன்றியை சுவைக்கும் நோய்” என்.ராமின் உடல், பொருள், ஆவி அனைத்தையும் வியாபிக்கத் தொடங்கியிருப்பதையே அது குறிக்கிறது.

பன்றிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி அல்ல முக்கியம். தீயில் வெந்து நிற்கும் அவற்றின் புலாலுக்கு இருக்கும் சுவையே இன்றைய அற்புதம். அந்த அதி அற்புதத்தைக் குறித்து பரப்புரை செய்வதே இன்றைய காலத்தின் தேவை என்பதே அந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களிடம் வெளிப்படும் முக்கிய அறிகுறி.

ஆர்.கே.நாராயணன் இன்று நம்மிடையே இல்லை. இருந்திருந்தால் சொற்களால் விவரிக்க முடியாத கொடுந்துயரத்திற்கு ஆளாகியிருப்பார்.

------------------------------------------------------

இன்று மேற்குலக மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்திருக்கும் பன்றிக் காய்ச்சலைவிட மோசமான நோயே “வெந்த பன்றிச் சுவை நோய்”. இந்த நோயே திரு.நரசிம்மன் ராமைப் பீடித்திருக்கிறது. இந்தக் கொடூர நோயைக் குணப்படுத்த வாய்ப்பிருக்கிறதா?

மாபெரும் திருடனாக இருந்த ஒருவன் வால்மீகியாக மாறி ராமாயணத்தை எழுதிய அற்புதம் இந்த மண்ணில் நடக்கவில்லையா?

அதுபோல, நரசிம்மன் ராமும் குணமாவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றே நாம் நம்புவோம். அவ்வாறு அவர் திருந்திவிட்டார் என்றால் நமக்குக் கிடைக்கப்போவது ஒரு பத்திரிகையாள வால்மீகி அல்லவா?

அப்படிப்பட்ட பத்திரிகையாள வால்மீகி உருவாக அவரது நண்பர்களின் அற்பணிப்பும், விடா முயற்சியும் அவசியம்.

அவரது தொழிலில் தொடர்புடையவர்களும், நண்பர்களும், நல்லவர்களுமான பிரஃபுல் பித்வாய், அருந்ததி ராய், சாய்நாத, காஞ்சா இலையா, சசிக்குமார், வி.எஸ்.ராமச்சந்திரன், பத்மா வெங்கடராமன், கே.ஹரிஹரன், மைக்கேல் தாரகன், சூசன் சக்காரியா, ராபின் ரெய்சிக், மைக்கேல் காப்டன், ஏ.எஸ்.பன்னீர்செல்வன்,ஏ.ஆர்.வெங்கடாசலபதி, ஏ.வைத்தியநாதன், சி.பி.சந்திரசேகர்,வ.கீதா, மங்கை, நித்யானந்தன் ஜெயராமன், எம்.எஸ்.எஸ்.பாண்டியன் ஆகியோர்ர் அவர் நல்வழிப் பட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவரது சகோதரி, சகோதரர்களான திருமதி.உஷா, திரு.முரளி மற்றும் திரு. ரவி ஆகியோரும் இந்த முயற்சியில் விடாப்பிடியாக ஈடுபட வேண்டும்.

அப்படிப்பட்ட முயற்சியே நரசிம்மன் ராமின் முதிய நண்பரும், நல்லவருமான அமரர் ஆர்.கே.நாராயணனின் ஆத்மாவை சாந்தப் படுத்தும்.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது