Friday, September 11, 2009

தமிழர் பாரம்பரியத்துடன் விளையாடும் ஐடியா அலைபேசி நிறுவனம்

மா_தவி

பிர்லா குழுமத்துக்கு சொந்தமான ஐடியா செல்லுலார் நிறுவனம் 2009 மே 25 ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் தன் சேவையைத் துவக்கியது. ஜூலை 9 ஆம் தேதியில் இருந்து சென்னையிலும் அது தன் சேவையை அளிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 25,000 சில்லரை விற்பனை மையங்களையும், 60 ஐடியா காட்சி அறைகளையும் நிறுவ அது திட்டமிட்டிருக்கிறது.

இந்தியா முழுவதும் சுமார் 4.7 கோடி அலைபேசி வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் ஐடியா செல்லுலார் நிறுவனமானது தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை செயல்படவில்லை. அந்த நிறுவனத்திற்குப் பலகாலமாக இருந்த அந்தக் குறை இன்று தீர்ந்துள்ளது.

இருப்பினும் அது தமிழ்நாட்டிற்குள் அடியெடுத்து வைத்திருக்கின்ற காலமும், தன்மையும் சிக்கல் மிகுந்த பல கேளவிகளை எழுப்புவதாக உள்ளன.

ஆக்சியாடா (Axiata)

ஐடியா செல்லுலார் நிறுவனத்தில் பிர்லா குழுமத்திற்கு சுமார் 49% பங்குகள் உள்ளன. சுமார் 15% பங்குகள் மலேசியாவைச் சேர்ந்த ஆக்சியடா நிறுவனத்துக்கும், சுமார் 11% பங்குகள் அமெரிக்க நிதி நிறுவனமான P5 Asia Investments (Mauritius) Ltd.-ற்கும், சுமார் 3% பங்குகள் இங்கிலாந்தைச் சேர்ந்த Monet Limited -ற்கும் சொந்தமாக உள்ளன.

ஆக்சியாடா நிறுவனமானது ஐடியா செல்லுலாரில் உள்ள தனது பங்குகளை 40%-க்கும் அதிகமாகக் கூட்டிக்கொள்வதற்கான சிந்தனையில் உள்ளது.

ஆக்சியாடா நிறுவனம் என்பது ஆசியாவின் முன்னணி அலைபேசி நிறுவனங்களில் ஒன்றாகும். மலேசியா, இந்தோனேசியா, வங்காள தேசம், இலங்கை, கம்போடியா ஆகிய நாடுகளில் உள்ள அலைபேசி சேவையில் அது முன்னணி இடத்தை வகித்து வருகிறது. இந்தியா, சிங்கப்பூர், ஈரான், பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய நாடுகளில் அது தன் சேவையைப் பெருக்கிடும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஆக்சியாடா நிறுவனம் 2009 மே மாதம் வரையிலுமே “டெலிகாம் மலேசியா” என்ற பெயரையே கொண்டிருந்தது. மே மாதம் தொட்டு அது ஆக்சியாடா என்ற புதிய பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.

மலேசிய அரசுக்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்கள் ஆக்சியாடாவில் சுமார் 45% பங்குகளை வைத்துள்ளன. மலாய் இனத்தைச் சேர்ந்த முதலாளிகள் சுமார் 39% பங்குகளைக் கொண்டிருக்கின்றனர். சுமார் 8% பங்குகளை மலேசியாவில் உள்ள பிற இனத்தைச் சார்ந்த முதலாளிகளும், மீதமுள்ள 8% பங்குகளை வெளிநாட்டவர்களும் வைத்திருக்கிறார்கள்.

டயலாக் டெலிகாம் (Dialog Telekom)

இலங்கையின் சுமார் 60 லடசம் அலைபேசி வாடிக்கையாளர்களை இந்த நிறுவனம் கொண்டிருக்கிறது. இதுவே இலங்கையின் முன்னணி அலைபேசி நிறுவனமாகும். மேலும் இலங்கையில் முதலீடு செய்துள்ள மலேசியாவைச் சேர்ந்த நிறுவனங்களில் இதுவே முதலிடத்தை வகிக்கிறது.

1996 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் மலேசியாவின் ஆக்சியாடா நிறுவனம் 85% பங்குகளை வைத்துள்ளது.

இலங்கையில் முதலீடு செய்துள்ள நாடுகளில் இன்றளவும் மலேசியாவே முதலிடத்தை வகிக்கிறது. 2008 டிசம்பரில் இதன் மதிப்பு சுமார் 91 கோடி அமெரிக்க டாலராக இருந்தது.

நான்காம் ஈழப்போர் முடிந்த இரண்டு வாரத்தில் - அதாவது மே 29 - 31 ஆம் தேதிகளில் - சர்வதேச பாதுகாப்பிற்கான ஆய்வு நிறுவனம் (The International Institute for Strategic Studies) ஆண்டுதோறும் நடத்தும் ஆசியப் பாதுகாப்பிற்கான “ஷேங்ரீ லா சந்திப்பு” சிங்கப்பூரில் நடத்தப்பட்டது. அந்த சந்திப்பில் 27 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும், இராணுவத் தலைவர்களும் கலந்து கொண்டனர். இலங்கையின் வெளியுறவு அமைச்சரான ரோகித போலகாமாவும் அந்த சந்திப்பில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மலேசியாவின் இராணுவ அமைச்சரான ஹமிதியை அவர் அப்போது சந்தித்தார். விடுதலைப்புலிகள் இயக்கத்தை மலேசியா தடை செய்ய வேண்டும் என்று ஹமீதியை அவர் கேட்டுக் கொண்டார்.

அடுத்த நாளான மே 31 ஆம் தேதியன்று இலங்கைக்கான மலேசிய தூதரான திரு.ரோசில் இஸ்மாயில் “விடுதலைப் புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்ட இலங்கையில் முதலீடு செய்ய மலேசிய அரசு மிகவும் ஆர்வமாக உள்ளது” என்று வேண்டுகோளை கொழும்புவில் விடுத்தார்.

அவரது வேண்டுகோளுக்கு இலங்கை அரசு உடனடியாக செவி சாய்த்தது. மறு நாளே டயலாக் டெலிகாம் நிறுவனத்தை அது தொடர்பு கொண்டது. போரால் அழிவுக்குள்ளாகியிருக்கும் வன்னிப் பெருநிலப் பகுதியில் அலைபேசி சேவைக்கான கட்டமைப்பை அந்த நிறுவனம் உடனடியாக உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள வன்னி மக்களை மீண்டும் குடியமர்த்துவதற்கு முன்பாக, வன்னி நிலத்தில் குடியமரவுள்ள சுமார் ஒன்றரை லட்சம் சிங்கள இராணுவத்தினருக்கும், காவல்துறையினருக்கும், அரசு அதிகாரிகளுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் தேவையான அலைபேசி சேவையை வழங்குவதே ராஜபக்சா அரசின் கோரிக்கைக்கான அடிப்படையாகும்.

இந்தக் கோரிக்கையை டயலாக் டெலிகாம் நிறுவனம் உடனடியாக ஏற்றுக்கொண்டது. சிங்கள இராணுவத்தின் உதவியுடன் போரினால் அழிவுக்குள்ளாக்கப்பட்ட வன்னிப் பெருநிலத்தில் அலைபேசிக் கட்டமைப்பை நிறுவிடும் பணிகள் துரித கதியில் தொடங்கப்பட்டன. போருக்குப் பின் கிடைத்த மிகப் பெரிய இந்தத் தொழில் வாய்ப்பானது டயலாக் டெலிகாமையும் மலேசிய அரசையும் மகிழ்வித்தன.

எகிப்து நாட்டில் நடந்த அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட மலேசியப் பிரதமர் அப்துல் ரஜாக் ஜூலை 16 ஆம் தேதியன்று இலங்கை ஜனாதிபதி ராஜப்க்சாவை சந்தித்தார். போருக்குப் பிந்தைய இலங்கையில் மலேசிய நிறுவனங்களுக்கு ராஜபக்சா அரசு அளித்திருக்கும் தொழில் வாய்ப்பு குறித்து அவர் வெகுவாகப் பாராட்டினார். வன்னியின் மீள் கட்டமைப்புப் பணிகளில் மலேசிய நிறுவனங்களுக்கு முன்னிரிமைகளை வழங்குவதாக அப்துல் ரசாக்கிடம் ராஜபக்சா உறுதி வழங்கினார்.

இதைத் தொடர்ந்து ஆகஸ்டு 6 ஆம் தேதியன்று மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவரான திரு. செல்வராசா பத்மநாபா என்ற கே.பி.யை மலேசிய ரகசியக் காவல்துறை கைது செய்தது. சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பாக அவரை இலங்கை இராணுவத்தின் உளவுத் துறையினரிடம் ஒப்படைக்க அது எவ்விதத் தயக்கத்தையும் காட்டவில்லை.

வதைமுகாமில் சிங்கள இராணுவம் கே.பி.யை சித்திரவதை செய்யத் தொடங்கியிருந்த ஐந்தாவது நாளில் - அதாவது ஆகஸ்டு 12 ஆம் தேதியன்று - டயலாக் டெலிகாமின் வன்னிப் பெருநில அலைபேசி சேவையை சிங்கள இராணுவத்தின் முதன்மை சமிக்ஞை அதிகாரியான (Chief Signal Officer) பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கே தொடங்கி வைத்தார். “ வன்னிப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினருக்கும், கட்டமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கும், கன்னி வெடிகளை அகற்றும் பணியில் உள்ள அமைப்புகளுக்கும் டயலாக் டெலிகாமின் இந்த அலைபேசி சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கிளிநொச்சி, முல்லைத்தீவு, யானையிறவு, பூநகரி, மாங்குளம் மற்றும் துணுக்காய் ஆகிய இடங்களை இலங்கையின் அனைத்துப் பகுதிகளுடனும் இணைக்கும் இந்த அலைபேசி சேவையை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன்” என்று அவர் கூறினார்.

”வன்னிப் பெருநிலம் முழுவதையும் அலைபேசித் தொடர்புக்குள் கொண்டுவருவதே எம் நோக்கம். இதற்காக நாங்கள் 60 அலைபேசிக் கோபுரங்களை நிறுவப் போகிறோம். ஒரு கோடி டாலர் செலவில் இந்தத் திட்டத்தை நாங்கள் நிறைவேற்ற இருக்கிறோம்” என்று டயலாக் டெலிகாமின் முதன்மை நிர்வாக அதிகாரியான டாக்டர் ஹேன்ஸ் விஜயசூரியா தெரிவித்தார்.

இந்த விழா நடந்த அடுத்த நாளான ஆகஸ்டு 13 ஆம் தேதியன்று மலேசிய நிறுவனங்களுக்கு இலங்கை அரசு அளித்துள்ள முன்னுரிமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இலங்கைக்கான மலேசியாவின் தூதரான ரோசில் இஸ்மாயில் ஒரு லட்சம் அமெரிக்க டாலரை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள வன்னி மக்களுக்கான உதவித் தொகையாக இலங்கையின் வெளியுறவு அமைச்சரான ரோகித போலகாம்-விடம் வழங்கினார்.

வன்னி மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் மாபெரும் அநீதி

முகாம்களில் சிங்கள இராணுவத்தால் அடைக்கப்பட்டு அநீதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ள வன்னி மக்களின் அரசியல் உரிமைகள் பற்றி கவலைப் படாமல் வன்னி நிலத்தில் நுழைந்திருக்கும் முதல் தொழில் நிறுவனமே டயலாக் டெலிகாம். இந்த நிறுவனத்தின் வழியைப் பின்பற்றி வ்ன்னிக்குள் இன்று பல தொழில் நிறுவனங்கள் நுழையத் தொடங்கியுள்ளன.

வன்னி நிலத்தின் சொந்தக்காரர்களான தமிழ் மக்களில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் போரில் காணாமல் போயுள்ளனர். அவர்கள் நிலத்தில் இன்று சிங்கள அரசு அதிகாரிகளின் குடியேற்றம் திணிக்கப்பட்டுள்ளது. வன்னிப் பகுதியின் கட்டமைப்புக்கான அனைத்துப் பணிகளும் சிங்கள நிறுவனங்களுக்கும், சிங்கள அரசின் கூட்டாளிகளுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தையும் செயல் படுத்தும் அதிகாரம் உள்ள வடக்கு மாகாண செயல்பாட்டுக் குழுவில் உள்ள 19 பேரும் சிங்களர்களே.

ஆனால் வன்னி நிலத்துக்கு சொந்தக்காரர்கள் இன்று முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தாலும், உணவுப் பற்றாக்குறையாலும், நோய்களாலும், இராணுவத்தினரின் சித்திரவதையாலும் அவர்கள் சீரழிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

என்ன செய்யப் போகிறோம் ?

நம் சொந்தங்களின் சீரழிவுக்குத் துணைபோகும் முதன்மை நிறுவனமான டயலாக் டெலிகாமின் தலைவரான திரு.ஹேன்ஸ் விஜயசூர்யா தமிழ் நாட்டில் இன்று தன் சேவையைத் துவக்கியுள்ள ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினர்களில் ஒருவராக உள்ளார்.

நம் சொந்தங்களின் நிலத்தை அவர்களிடமிருந்து அந்நியப்படுத்தும் முயற்சியில் நேரடியாக ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனத்தைத் தன்னுள் கொண்டுள்ள ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் சேவையை இங்கு தமிழ்நாட்டில் நாம் ஏற்றுக் கொள்ளப் போகிறோமா? அல்லது அந்த நிறுவனம் தன்னை மாற்றிக்கொள்ளாத வரை அதற்கு நாம் நம் ஒத்துழைப்பை வழங்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவிக்கப் போகிறோமா?

”வன்னி நிலத்தில் இருந்து டயலாக் டெலிகாம் வெளியேற வேண்டும். அல்லது ஐடியா செல்லுலாரில் இருந்து அது வெளியேற வேண்டும். இவ்விரண்டும் நடக்காத சூழ்நிலையில் ஐடியா செல்லுலாரைத் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்ற செய்தியை நாம் திட்டவட்டமாக அறிவிக்கப் போகின்றோமா?

இது குறித்து நாமனைவரும் உடனடியாக முடிவெடுக்க வேண்டிய நேரம் இது.


ஆதாரம்:

1. http://www.ideacellular.com/IDEA.portal?_nfpb=true&_pageLabel=IDEA_Page_Share

2. http://www.ideacellular.com/IDEA.portal?_nfpb=true&portlet_MyIdeaController_5_actionOverride=%2FIDEA%2Fcontent%2FmyIdea%2FdisplayContent&_windowLabel=portlet_MyIdeaController_5&portlet_MyIdeaController_5displayParam=keyPeople&_pageLabel=IDEA_Page_AboutIdea

3. http://www.ideacellular.com/IDEA.portal?_nfpb=true&_pageLabel=IDEA_Page_IdeainMedia&displayParam=content_press_newreleases_ChennaiLaunch.html

4. http://www.ideacellular.com/IDEA.portal?_nfpb=true&_pageLabel=IDEA_Page_IdeainMedia&displayParam=content_press_newreleases_tn1.html

5. http://www.dialog.lk/about/overview/board-of-directors/

6. http://www.axiata.com/operating-companies/sri-lanka

7. http://www.axiata.com/about-us/at-a-glance

8. http://www.axiata.com/about-us/shareholding-structure

9. Arun Kumar, ”Axiata mulls open offer to raise stake in Idea”, May 28, 2009, Business Standard , http://www.business-standard.com/india/storypage.php?autono=359395

10. TV Sriram, "Lanka wants Malaysia to ban LTTE”,May 30, 2009, http://www.business-standard.com/india/news/lanka-wants-malaysia-to-ban-ltte/63291/on

11. "Malaysia to increase FDI in Sri Lanka”, May 31, 2009, http://sundaytimes.lk/090531/FinancialTimes/ft329.html
12. "New scope for Malaysian investment in Sri Lanka”, July 17, 2009, http://www.priu.gov.lk/news_update/Current_Affairs/ca200907/20090717new_scope_malaysian_investment.htm
13. " Dialog Telecom has launched a mobile phone network in Sri Lanka's former war zone”, http://en.acnnewswire.com/Article.Asp?Art_ID=2070〈=EN
14. "Dialog leads telecom infrastructure development in Northern Province”, http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=57855

15. " Sri Lanka launches mobile network in former warzone”, AFP, http://www.google.com
/hostednews/afp/article/ALeqM5jTHFCo6Xo3YtklDpV3MmllGPxWNg

16. " Malaysia donates US$100,000 to Sri Lanka for the welfare of the Internally Displaced Sri Lankans”, August 13, 2009, http://www.lankamission.org/content/view/2532/49/

17. " Malaysia keen to invest in Sri Lanka “ 14 August 2009, http://firstlanka.com/english/news/malaysia-keen-to-invest-in-sri-lanka/

18. http://www.ifsl.org.uk/output/About-Us.aspx

19. http://www.iiss.org/events-calendar/forthcoming-events/8th-shangri-la-dialogue/

20. http://www.iiss.org/conferences/the-shangri-la-dialogue/

No comments:

Post a Comment

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது