Saturday, September 12, 2009

என்.ராம் - வெந்த பன்றியின் கதை

மா_தவி

1994 ஏப்ரல் 10 ஆம் தேதியன்று ஆங்கில நாவலாசிரியர் ஆர்.கே.நாராயணனின் மகள் ஹேமா மரணமடைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கீமோதெரபி சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். நோயைவிட சிகிச்சையே அவரைக் கடுமையாக பாதித்திருந்தது. “புற்றுநோய் அணுக்களை மட்டுமல்ல- உடலின் அனைத்து அணுக்களையும் தாக்கி அழிக்கின்ற கீமோதெரபி முறையை” நாராயணனால் ஜீரணிக்க முடியவில்லை. மகளின் இழப்பைத் தாங்க முடியாத அந்தக் கிழவர், நிகழ்விற்கு வந்திருந்த தன் நண்பரான இந்து என்.ராமிடம், “ பன்றியை வேக வைப்பதற்காக வீட்டைக் கொளுத்திவிட்டார்களே” என்று அழுது புலம்பினார்.

பன்றி குறித்த ஆர்.கே.நாராயணனின் அரற்றல் என்.ராமைக் கடுமையாகப் பாதித்தது. அதன் அர்த்தம் அவருக்கு விளங்கவில்லை. அதைக் கண்டறியும் கடுமையான முயற்சியில் அவர் ஈடுபட்டார். 1823 ஆம் ஆண்டில் “எலியாவின் கட்டுரைகள்” என்ற நூலில், சார்லஸ் லேம்ப் என்பவர் எழுதிய “வெந்த பன்றி குறித்த ஓர் ஆய்வு” என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த சீனப் பழங்கதை ஒன்றில் அதற்கான அர்த்தம் இருப்பதை அவர் கடைசியில் வெற்றிகரமாகக் கண்டு பிடித்தார்.

..........................

“முன்னொரு காலத்தில் சீன நாட்டின் கிராமம் ஒன்றில் பன்றிகளை ஒருவர் தன் வீட்டில் வளர்த்து வந்தார். ஒரு நாள், தன் மகனிடம் பன்றிகளைக் கவனிக்கச் சொல்லிவிட்டு வெளியூர் போய் விட்டார். அன்று இரவு வழக்கம்போலப் பன்றிகளை வீட்டில் அடைத்துவிட்டு சிறுவன் தூங்கப் போய்விட்டான். அதிகாலையில் யாரோ ஒருவன் வீட்டிற்குத் தீ வைத்து விட்டான்.

தீயைக் கண்ட பன்றிகள் ஓலமிட்டன. அலறி அடித்து எழுந்த சிறுவன் வீட்டைவிட்டு வெளியே ஓடினான். அவனது தந்தை அப்போதுதான் வெளியூரிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். எரிந்து கொண்டிருந்த வீட்டைக் கண்ட அவர் பதறி அடித்து ஓடி வந்தார். மகனுடன் சேர்ந்து தீயை அணைக்க முயன்றார்.. முடியவில்லை. பன்றிகள் அனைத்தும் தீயில் வெந்து மாண்டு போயின.

தீ தொடங்கிய உடனேயே பன்றிகளை ஏன் காப்பாற்ற முயற்சிக்கவில்லை என்று சிறுவனைத் தந்தை கடிந்து கொண்டார். அவனைக் கண் மண் தெரியாமல் அடிக்கத் தொடங்கினார். அடியைத் தாங்க முடியாமல் அவன் கீழே விழுந்தான். அவனது கை விரல் ஒன்று தற்செயலாக வெந்த பன்றி ஒன்றின் மீது பட்டது. பன்றியின் சூடு விரலைப் பதம் பார்த்தது. அலறினான். விரலின் எரிச்சலைக் குறைக்க அதனைத் தன் வாயில் திணித்துக் கொண்டான்.

என்ன காரணத்தினாலோ அவனது அழுகை திடீரென நின்று போனது. கீழே விழுந்து கிடந்தவன் துள்ளி எழுந்தான். தந்தையை நோக்கி ஓடினான். அவரைப் பார்த்து அவன் கூவினான்: “ அப்பா! வெந்த பன்னி ரொம்ப டேஸ்ட்டா இருக்குப்பா! நீயும் டேஸ்ட் பாரு!!”

அவரும் வெந்த பன்றிகளை சுவைத்துப் பார்த்தார். அந்த அற்புதச் சுவை பற்றி அவர் வெளியிட்ட செய்தி சீன நாட்டின் எட்டுத் திக்கும் பரவியது.
சுவையில் மயங்கிய சீனர்கள், பன்றிகளை வீட்டில் அடைத்தார்கள். வீடுகளுக்குத் தீ வைத்தார்கள். வெந்த பன்றியின் சுவையில் திளைக்கத் தொடங்கினார்கள்.”

-------------------------------------------

வெந்த பன்றியின் முழுக்கதையையும் என்.ராம் கண்டுபிடித்த போது அவர் பத்திரிகைத் துறையில் நுழைந்து 28 ஆண்டுகள் கழிந்திருந்தன. அந்தக்கதை அவருக்கு ஏதோவொரு முக்கியக் கருத்தினைக் கூறுவதாகப் பட்டது.

1966 ஆம் ஆண்டிலிருந்தே என்.ராம் தனது பத்திரிகைத்துறைப் பயணத்தைத் தொடங்கிவிட்டிருந்தார். இருப்பினும், 1980 ஆம் ஆண்டில் அவர் இந்து நாளிதளின் வாஷிங்டன் நிருபராகப் பணியாற்றியபோதுதான் அவரது செயல்பாடுகள் முதன் முதலில் வெளியில் தெரியத் தொடங்கின. 1982 ஆம் ஆண்டில் சர்வதேச நிதியத்துடன் இந்திய அரசு செய்துகொண்ட ரகசிய ஒப்பந்தத்தை வெளிக்கொண்டுவந்த அவரது பத்திரிகை செயல்பாட்டிற்குப் பெரியதொரு அங்கீகாரம் கிடைக்கவில்லை. 1984 ஆம் ஆண்டில் பிரண்ட்லைன் சஞ்சிகை தொடங்கப்பட்ட பின்னர் பல்வேறு அரசியல்வாதிகளுடனும், அதிகாரிகளோடும் சேர்ந்து அவர் இயங்கத் தொடங்கிய போதுதான் அவருக்கு சமூக அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது.

1978 ஆம் ஆண்டிலிருந்ந்து 1988 ஆம் ஆண்டுவரை ஏழு முறை சீனாவுக்கு சென்று வந்தார். சீனா குறித்து பிரண்ட்லைனிலும், இந்துவிலும் எழுதினார். என்றாலும்கூட, 1983 இல் வெடித்துக் கிளம்பிய இலங்கை இனப் பிரச்சினையில் அவர் தன்னை இணைத்துக் கொண்ட போதுதான் அவருக்கு அகில இந்திய மற்றும் தெற்கு ஆசியத் தளங்களில் முக்கியப் பத்திரிகையாளர் என்ற பெயர் முதன்முதலில் கிடைக்கத் தொடங்கியது. 1987 ஆம் ஆண்டில் கசியத் தொடங்கிய போபோர்ஸ் பீரங்கிப் பேர ஊழல் பிரச்சினையில் 1988-89 ஆம் ஆண்டுகளில் சித்ரா சுப்பிரமணியத்துடன் இணைந்து அவர் தகவல்களை இந்து நாளிதளில் வெளியிட்ட போது அவர் தெற்கு ஆசியாவின் நன்கு அறியப்பட்ட பத்திரிகையாளர்களில் ஒருவராக மாறிப் போனார்.

”அறிவார்ந்தவர், ஊழலுக்கு எதிரானவர்” என்ற படிமங்கள் அவரது பிம்பத்தோடு ஒட்டிக்கொண்டன. பத்திரிகைத் துறை சார்ந்த பரிசுகளும், 1990 ஆம் ஆண்டின் பத்ம பூஷன் பரிசும் இந்தப் படிமங்களை மேலும் உறுதி செய்தன.

“அடுத்து என்ன” என்ற கேள்வி அவரது மனதில் முழுமையாக நிறைந்து நின்றிருந்த இந்தக் காலகட்டத்தில்தான் ஆர்.கே.நாராயணனின் ”வெந்த பன்றி” அவரது வாழ்வில் குறுக்கிட்டது. அவரது மனதை அது தன்பால் ஈர்த்துக் கொண்டது. இருந்தாலும், அதனால் அவரது செயல்பாடுகளை மாற்றியமைக்க முடியவில்லை. அவரது செயல்பாடுகளை மாற்றி அமைக்க அது அடுத்த பத்து ஆண்டுகள் காத்திருக்க நேரிட்டது.

------------------------------------------

1994 ஆம் ஆண்டில் “பிசினஸ் லைன்” நாழிதள் தொடங்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் ஊடகவியலாளர் சசிகுமாருடன் இணைந்து “ ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம்” கல்லூரியை சென்னையில் தொடங்கினார். இந்த நிகழ்வுகள் அவரது தனிமனித வாழ்வில் முக்கியமானவை என்றாலும்கூட, பொதுவெளியில் அவருக்கிருந்த படிமத்தை மேலெடுத்துச் செல்ல அவை பெரியளவில் உதவவில்லை.

1980-களில் இலங்கை மற்றும் போபோர்ஸ் பிரச்சினைகள் வாயிலாக அவருக்குப் புகழ் குவிந்தது. அதே போன்றதொரு வாய்ப்பு 2002 ஆம் ஆண்டில் குஜராத் மதப் படுகொலையின்போது மீண்டும் கிடைத்தது. நரேந்திர மோடியின் மதவாதத்திற்கெதிராக அவர் காத்திரமாக எழுதியபோது அறிவார்ந்தவர் என்றும் ஊழலுக்கு எதிரானவர் என்றும் அறியப்பட்டிருந்த ராம் “மதவாதத்திற்கெதிரான மனிதாபிமானம் மிக்க பத்திரிகையாளராகவும்” உருமாற்றம் பெற்றார்..

2003 ஏப்ரலில் தமிழ்நாடு சட்டசபையானது, இந்து நாளிதளின் தலையங்கம் ஒன்றைக் கண்டித்து அதன் உயர்மட்ட நிர்வாகக் குழு மீது உரிமைப் பிரச்சைனையைக் கொண்டுவந்தது. சபையின் உரிமைக்கான குழுவிடம் இந்தப் பிரச்சினை விசாரணைக்கு அனுப்பப்பட்டது. நவம்பர் மாதம் முதல் வாரத்தில் அந்தக் குழு தன் பரிந்துரையை முன்வைத்தது. அதன் பேரில் இந்து நாளிதளின் முக்கியஸ்தர்களான என்.முரளி, மாலினி பார்த்தசாரதி, எஸ்.ரங்கராஜன், வி.ஜெயந்த் மர்றும் ராதா வெங்கடேசன் ஆகியோரைக் கைது செய்து 15 நாள் காவலில் வைக்கத் தமிழ்நாடு சட்டசபை உத்தரவிட்டது.

2003 ஏப்ரலில் தமிழ்நாடு சட்டசபை தொடர்பான பிரச்சினை உருவான பிறகே என்.ராம் இந்து பத்திரிகை நிறுவனத்தின் தலைவராக ஜூன் 27 இல் நியமிக்கப் பட்டார். நவம்பர் 7 இல் பிறப்பிக்கப்பட்ட சட்டசபையின் கைது உத்தரவை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றார். வெற்றியும் பெற்றார். பத்திரிகை சுதந்திரத்திற்கான போராளி என்ற படிமத்தை இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் பரிசாகப் பெர்றார்.

அறிவார்ந்தவர், ஊழலுக்கு எதிரானவர், மனிதாபிமானி, பத்திரிகை சுதந்திரத்திற்கான போராளி என்ற படிமங்களுடன் அவர் உலா வரத் தொடங்கியிருந்த அந்த காலகட்டத்தின்போதுதான் ஆர்.கே.நாராயணனின் அரற்றலின் ஊடாக ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக வெளியாயிருந்த “வெந்த பன்றியின் கதையானது” என்..ராமின் செயல்களின் ஊடாகத் தன் சுவையை இந்தியாவிற்குள்ளும் பரப்பத் தொடங்கியிருந்தது.

-----------------------------------------------------------

2003 ஜூன் 27 ஆம் தேதியன்று இந்து குழுமத்தின் தலைவராக என்.ராம் நியமிக்கப்பட்டார். இந்து நாளிதளின் அன்றைய தினத் தலையங்கம் பத்திரிகைத் துறையின் அறம் பற்றியதாகவும், இந்து நாளிதளின் கொள்கையை விளக்குவதாகவும் இருந்தது.

“ செய்தி அறிக்கைகள், செய்தி ஆய்வுகள், (நிகழ்வு குறித்த) கருத்துகள் என்ற மூன்று வகை எழுத்துக்கள் உள்ளன. இவைகளுக்கிடையில் உள்ள வேறுபாடுகளை இன்றுள்ள பெரும்பாலான செய்தித்தாள்கள் கண்டுகொள்வதில்லை; “ஆசிரியரின் கருத்துக்களையே செய்தி அறிக்கைகளாக வெளியிடும் போக்கே மேலோங்கி நிற்கிறது. இந்து நாளிதளும் இந்த “ஆசிரியக் கருத்தை செய்தி அறிக்கையாக வெளியிடும்” கிருமியால் பாதிப்புக்கு உள்ளாகித்தான் இருந்தது; இந்தப் போக்கைக் களைந்து, மேற்கூறிய எழுத்து வகைப்பாடுகளுக்கிடையிலான எல்லலையைக் கறாராக வரையறுத்து, நாளிதளின் வெளிப்பாட்டை பருண்மையான மற்றும் யதார்த்தமான ஒன்றாக மாற்றி அமைப்பதற்கு இந்து உறுதி பூண்டுள்ளது” என்று அந்தத் தாலையங்கம் அறிவித்தது..

” பத்திரிகைத் தொழிலானது சமூக நன்மைக்காகத்தான் செயல்படுகிறது என்று சொல்லிக்கொள்ளவேண்டுமென்றால் ஆட்சி அதிகாரத்தை மாற்றுகிறோம் என்ற போர்வையில் பரந்துபட்ட மக்களின் மீது அதிநவீன ஆயுதங்களைக் கொண்டு மரணத்தையும், தந்தோன்றித்தனத்தையும், குழப்பத்தையும் மழையாகப் பொழியும் செயல்பாடுகள் குறித்த தெளிவான நிலைப்பாட்டை அது எடுக்க வேண்டும்” என்றும் அந்தத் தலையங்கம் கூறியது.

ஆனால், திபெத் குறித்து 2000, 2007 மர்றும் 2009 ஆம் ஆண்டுகளில் என்.ராமால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களும், கட்டுரைகளும் இந்தத் தலையங்கத்தில் வெளியிடப்பட்ட கருத்துகளுக்கு நேர் எதிராகவே இருந்தன.

-------------------------------------------

2000 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின்போது திபெத்துக்குள் ஐந்து நாள் பயணம் செய்யும் வாய்ப்பை இந்து ராமிற்கு சீன அரசு ஏற்படுத்திக் கொடுத்தது. தனது பயணம் குறித்த கட்டுரையை செப்டம்பரில் பிரண்ட்லைன் இதழில் அவர் வெளியிட்டார். இந்தக் கட்டுரை சீன அரசை வெகுவாகக் கவர்ந்தது. இதன் காரணமாக மீண்டும் 2007 ஜூன் மாதத்திலும், 2009 பிப்ரவரியிலும் என்.ராமிற்கு திபெத்தைப் பார்க்கும் வாய்ப்பை சீன அரசு உருவாக்கிக் கொடுத்தது. திபெத் குறித்து அவரால் எழுதப்பட்ட கட்டுரைகள் யாவும் வெந்த பன்றியின் சுவையைத் தற்செயலாக அறிந்து கொள்ள நேரிட்ட சிறுவன் தன் தந்தையை நோக்கி மகிழ்ச்சியில் கூவியதையே நினைவு படுத்துவதாக இருந்தது.

--------------------------------------------------------------

திபெத்தை ஆக்கிரமித்துள்ள சீன அரசிற்கு எதிராக 1959 ஆம் ஆண்டில் வெடித்தெழுந்த திபெத் மக்கள் எழுச்சியின் 50 வது ஆண்டு தினம் 2009 மார்ச் 10 ஆம் தேதியாகும். அந்த நாளுக்கு சில நாட்கள் முன்னதாக திபெத்தை சீன அரசு எவ்வாறெல்லாம் வளப்படுத்தியிருக்கிறது என்ற என்.ராமின் கட்டுரை இந்து நாளிதளில் வெளியிடப்பட்டது.

சீன அரசின் பராக்கிரமத்தையும், விவேகத்தையும் அந்தக் கட்டுரை பாராட்டுகிறது. ஆனால், சீன அரசின் ”வளப்படுத்தும் செயல்பாடுகள்” குறித்து திபெத் மக்கள் எப்படிப்பட்ட கருத்தினைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய அவர் எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லை. கட்டுரையில் அவரால் வெளியிடப்பட்ட தகவல்கள் யாவும் திபெத்தை 60 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருக்கும் சீன அரசின் அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்டவையே.

1959 ஆம் ஆண்டின் திபெத் மக்கள் எழுச்சியின்போது 86 ஆயிரம் திபெத் மக்கள் கொல்லப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான மக்களும், பிக்குகளும் பொது இடங்களில் வைத்து சீன இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 1953-1964 காலகட்டத்தில் திபெத்தில் சுமார் 9 லட்சம் பேர் காணாமல் போயினர். அவர்களில் பெரும்பாலானோர் சீனச் சிறைகளில் அடைக்கப்பட்டு மரணத்தைத் தழுவியிருக்கக் கூடும் என்பது 10 வது பஞ்சென் லாமாவின் கருத்து.

திபெத்திற்குள் சீனர்களின் குடியேற்றம் நடைபெறவில்லை என்று என்.ராமின் 2007 ஆம் ஆண்டின் கட்டுரைகள் வாதிடுகின்றன. ஆனால் உண்மை அதற்கு நேர் மாறாகவே உள்ளது.

திபெத்தின் சுயாட்சியை இந்திய அரசு அங்கீகரிக்குமேயானால், கோவா மற்றும் சிக்கிமின் சுயாட்சிக்கான குரலையும் அங்கீகரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அது தள்ளப்படும் என்ற மறைமுக எச்சரிக்கையையும் அவரது கட்டுரைகள் வைக்கத் தவறவில்லை.

---------------------------------------------------------

திபெத் பற்றிய செய்திகளை வெளியிடுவதில் என்.ராம் சீன அரசு சார்பாகவே செயல்படுகிறார். சீன அரசின் செய்தி நிறுவனமான “ஜின்ஹூவா” வெளியிடும் செய்திகளை மட்டுமே அவர் நம்புகிறார். மாற்றுத் தகவல்களை அவர் கண்டுகொள்வதில்லை. சீன அரசிற்கான பிரச்சாரத்தைத் தவிர வேறு எதையும் செய்யத் துணியாத ஜின்ஹூவா செய்தி நிறுவனத்தின் பிரச்சாரச் செயல்பாடுகள் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை “எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் இயக்கம்” 2005 ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியிட்டது. ஆதாரப்பூர்வமான அந்த அறிக்கை வெளியான பின்னரும் கூட இந்து ராம் “ஜின்ஹூவா” செய்தி நிறுவனத்தைத் தூக்கிப் பிடிப்பதைக் கைவிடவில்லை.

உலக பௌத்தர்களின் கூட்டம் சீனாவில் 2006 ஏப்ரலில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சீன அரசால் திபெத் மக்களுக்கான மதத் தலைவர் என்று நியமிக்கப்பட்ட ”பஞ்சென் லாமா” கலந்து கொண்டார். அவரை திபெத் மக்கள் “பஞ்சென் ஜூமா” என்றே அழைக்கிறார்கள். அதற்கு ”போலி மதத் தலைவர்” என்பதே பொருள். . தலாய் லாமா அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சென் லாமாவான கெண்டுன் நியாமா-வையே திபெத் மக்கள் தங்களின் உண்மையான மதத் தலைவராகக் கருதுகிறார்கள். இந்தத் தகவலை “டைம்ஸ் ஆஃப் இந்தியா”வின் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியான செய்தி அறிக்கை வெளிப்படுத்தியது. ஆனால் அதே தேதியில் இந்துவில் சீன அரசினால் திபெத் மக்களின் மதத் தலைவராக நியமிக்கப்பட்ட பஞ்சென் லாமாவை மட்டுமே குறிப்பிட்டுப் பேசும் “ஜின்ஹூவா” நிறுவனத்தால் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையே வெளியானது. உண்மையான “பஞ்சென் லாமா” பற்றி இந்து நாளிதள் வாய் திறக்கவில்லை.

---------------------------------------------------

1989 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் சீன நாட்டின் தலைநகரான பீஜிங்கின் தியானென்மென் சதுக்கத்தில் அரசின் கொள்கைக்கு எதிராக மக்கள் போராட்டம் தொடங்கியது. 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட அந்தப் போராட்டத்தை ஜூன் 3 ஆம் தேதிக்குள் சீன அரசு கொடுங்கரம் கொண்டு அடக்கியது. இந்த அடக்குமுறைச் செயலில் சுமார் 2500 பேர் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தப்பட்னர். வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் சீனாவில் தடை செய்யப்பட்டன. போராட்டத்துக்கு ஆதரவாக இருந்த கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் வாழ்நாளுக்கும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

1990 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தின்போது சீன அரசினால் கடைப்பிடிக்கப்படும் மனித உரிமை மறுப்புக் கலாச்சாரம் குறித்த செய்திகளை வெளியிடுவது மேற்குலக ஊடகங்களின் வழக்கமாக இருந்து வருகிறது. 2006 ஆம் ஆண்டில் சுமார் 10 கோடி பேரை உறுப்பினர்களாகக் கொண்ட சீன நாட்டின் ஃபாலுன் காங் மதப் பிரிவினர் எவ்வாறு சீன அரசால் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பது குறித்த ஆய்வறிக்கை ஒன்று கனடா நாட்டின் மனித உரிமை வழக்கறிஞர் டேவிட் மத்தாஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டேவிட் கில்கூர் ஆகியோரால் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான ஃபாலுங் காங் மக்களின் உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு எவ்வாறு அவை பிறருக்கு சீன அரசால் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறித்த தகவல்களை அது முன்வைத்தது. இது குறித்த செய்தியை 2006 ஏப்ரல் 19 ஆம் தேதி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டது. அதுபோலவே, ஏப்ரல் 20 ஆம் தேதியன்று AFP செய்தி நிறுவனம் உலகத்திலேயே மரணதண்டனை அதிகம் விதிக்கப்படும் நாடு சீனாவே என்ற செய்தியை வெளியிட்டது.

இந்த இரண்டு செய்திகளையும் இந்து நாளிதளில் வெளியிட என்.ராம் முன்வரவில்லை. மாறாக, இந்த செய்திகளைப் பிற செய்தித்தாள்கள் வெளியிட்ட அதே நாட்களில் சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு சென்று, “நான் மைக்ரோசாஃப்ட்டின் நண்பன்” என்று கூறியது குறித்த செய்தி ஒன்றை அவர் வெளியிட்டார். ஏப்ரல் 15 ஆம் தேதியன்று உலகமே வியந்து பார்க்கும் மிகப் பெரிய சீன அணை மற்றும் சந்தைக் கட்டிடம் ஒன்றைக் குறித்து சீனாவின் இந்து நிருபரான பல்லவி ஐயர் எழுதிய கட்டுரையையும் அவர் வெளியிட்ட்டார். பல்லவி ஐயரால் எழுதப்பட்ட சீனாவில் உள்ள சிவப்பு டர்பன் சீக்கியர்களைப் பற்றிய ஒரு கட்டுரையை மே மாதத்திலும், அவராலேயே எழுதப்பட்ட திபெத்திற்குள் செல்லும் ரயிலைப் பற்றிய கட்டுரை ஒன்றை ஜூலையிலும் அவர் வெளியிட்டார். தெற்கு ஆசிய ஆய்விற்கான சீனக் கூட்டமைப்பின் தலைவரான முனைவர். யோங்குய் என்பவரின் கட்டுரை ஒன்றையும் அவர் ஜூன் மாதத்தில் வெளியிட்டார்.

சீன அரசினை உலக மேம்பாட்டிற்கான அரசு என்று அறிவிக்கும் செய்திகளையும், கட்டுரைகளையும் மட்டுமே வெளியிட வேண்டும் என்ற ( பத்திரிகைத் தொழில் அறத்திற்கு முரணான ) தணிக்கைக் கோட்பாட்டை என்.ராம் கொண்டிருப்பதையே அவரின் இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன. திபெத்தின் மீதும், பிற சிறுபாண்மையினரின் மீதும், அரசியல் எதிர்ப்பாளர்கள் மீதும் சீன அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கிற ஒடுக்குமுறை நடவடிக்கைகள் குறித்த செய்திகளோ, ஆய்வறிக்கைகளோ மக்களை சென்றடையக் கூடாது என்ற தணிக்கை மனதையே அவர் கொண்டுள்ளார் என்பதையே அவரின் மேற்கூறிய ந்டவடிக்கைகள் தெளிவாக்குகின்றன.

2003 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதியன்று இந்து குழுமத்தின் தலைவராக நியமிக்கப்பட்டபின் அவர் எழுதிய முதல் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்த “ஆசிரியக் கருத்தை செய்தி அறிக்கையாக வெளியிடும்” கிருமியால் அவர் கடுமையாகப் பாதிக்கப் பட்டிருப்பதையே அவரின் மேற்கூறிய நடவடிக்கைகள் எடுத்து இயம்புவதாக உள்ளன.

-----------------------------------------------

2000 ஆம் ஆண்டிலிருந்து திபெத் குறித்தும், சீனா குறித்தும் என்.ராமுக்குக் கிடைத்த பத்திரிகைத் துறை அனுபவங்கள், இலங்கைப் பிரச்சினையை எவ்வாறு தன் பத்திரிகைகளில் கையாள வேண்டும் என்ற கோட்பாட்டை அவருக்கு வகுத்துக் கொடுத்திருக்கின்றன.

நடந்து முடிந்த போரில் இலங்கை அரசால் வன்னி மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி குறித்து மேற்குலகப் பத்திரிகைகள் விரிவாக எழுதிக் கொண்டிருக்கும் வேளையில், என்.ராமுக்கு அந்த அநீதிகள் கண்களில் படவில்லை.

2008 ஏப்ரலில் இருந்த 4 லட்சம் வன்னி மக்களில் இன்று 2 லட்சத்து 80 ஆயிரம் பேருக்குதான் கணக்கிருக்கிறது. 14 மாத காலத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை. முகாம்களில் அடைக்கப்பட்ட வயதுக்கு வந்த ஆண்களனைவரையும் தனிப்பட்ட வதை முகாம்களில் அடைக்கும் திட்டத்தில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கிறது. பெண்களையும், குழந்தைகளையும் மட்டுமே மீளக் குடியமர்த்தப் போகும் திட்டங்களை அது முன்னெடுத்து வருகிறது. அவர்களை வணிக நிறுவனங்களின் விவசாயக் கூலிகளாக மாற்றும் திட்டத்ததையும் அது தீட்டி வருகிறது. வன்னி நிலப்பகுதியை மேம்படுத்துவதற்கான 18 பேர் அடங்கிய செயற்குழுவில் ஒருவர் கூடத் தமிழர் இல்லை. இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகளும், நிர்வாக அதிகாரிகளும் மட்டுமே அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இப்படிப்பட்ட குழுவுடன் இணைந்து வன்னிப் பெண்களை வணிக நிறுவனங்களுக்குக் கீழ் வேளாண் நில்ங்களில் மீளக் குடியமர்த்தும் திட்டங்களுக்கு இந்திய வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதனின் துணையை இலங்கை அரசு நாடியுள்ளது. அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்து விட்டார். இந்த செயல்பாடுகளுக்காக இந்திய அரசு மே 23 ஆம் தேதியன்று 500 கோடி ரூபாய் நிதி உதவியை அறிவித்திருக்கிறது.

வன்னிப் பெருநிலம் இன்று கடுமையான இராணுவமயமாக்கலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. அங்கு 12 இராணுவ டிவிஷன்கள் நிறுத்தப்படவிருப்பதாக லெப்.ஜெனரல் ராகவன் சமீபத்தில் தெரிவித்திருக்கிறார். இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப்படை மூன்று டிவிஷ்ன்களை மட்டுமே கொண்டிருந்தது என்பதைக் கோடிட்டுக் காட்டிய அவர், வன்னியில் நிறுத்தப்படவிருக்கிற 12 டிவிஷன்களின் 84 ஆயிரம் சிங்கள இராணுவ வீரர்களால் இராணுவ நகரங்கள் பல உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்றார். இராணுவம் தவிர, சிங்களர்களைக் கொண்ட காவல்துறையும் அங்கு உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.சமீபத்தில் இந்தோனேசியாவிற்கு சென்றிருந்த இலங்கை அதிபரின் ஆலோசகரான பசில் ராஜபக்சா, அந்த நாட்டின் தொழில் அதிபர்களை வன்னியின் வேளாண் துறையில் பெண்களை முக்கியமாக வைத்து உருவாக்கப்படவிருக்கிற “ஒப்பந்த விவசாயத்தில்” ஈடுபட அழைப்பு விடுத்திருக்கிறார். தென் இலங்கையில் சிறையில் உள்ள 30 ஆயிரம் ஆண் சிங்களக் கைதிகளை வன்னியில் குடியமர்த்தும் திட்டம் உள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இப்படி வன்னிப் பெண்களையும், சிறுவர்களையும் அவர்களை விட அதிக எண்ணிக்கையில் உள்ள இராணுவத்தினர், காவல் மற்றும் நிர்வாகத் துறையினர், சிங்களச் சிறைக் கைதிகள், உலக அளவில் நலன்களைக் கொண்டுள்ள வணிக நிறுவனங்கள் மத்தியில் மீளக் குடியமர்த்திவிட்டு, அவர்களின் மத்தியில் தேர்தலை நடத்தி, பிரதேச அரசியல் சபைகளை 13 ஆம் சட்டத் திருத்தத்தின்படி உருவாக்கும் இலங்கை அரசின் அகோர அரசியல் நாடகத்தை ”அற்புதம்” என்று என். . ராம் பாராட்டியிருக்கிறார்.

ஜூன் 30 ஆம் தேதியன்று இரவு உணவிற்குப் பிறகு அவருக்கு இலங்கை ஜனாதிபதி அளித்த சிறப்பு நேர்காணலை அவர் இந்து நாளிதளில் வெளியிட்டது எதைக் குறிக்கிறது?

தன் மகளின் மரணத்தின் போது புலம்பலினூடாக ஆ.கே.நாராயணனால் என்.ராமிடம் சொல்லப்பட்ட ”வீட்டைக் கொளுத்தி பன்றியை சுவைக்கும் நோய்” என்.ராமின் உடல், பொருள், ஆவி அனைத்தையும் வியாபிக்கத் தொடங்கியிருப்பதையே அது குறிக்கிறது.

பன்றிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி அல்ல முக்கியம். தீயில் வெந்து நிற்கும் அவற்றின் புலாலுக்கு இருக்கும் சுவையே இன்றைய அற்புதம். அந்த அதி அற்புதத்தைக் குறித்து பரப்புரை செய்வதே இன்றைய காலத்தின் தேவை என்பதே அந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களிடம் வெளிப்படும் முக்கிய அறிகுறி.

ஆர்.கே.நாராயணன் இன்று நம்மிடையே இல்லை. இருந்திருந்தால் சொற்களால் விவரிக்க முடியாத கொடுந்துயரத்திற்கு ஆளாகியிருப்பார்.

------------------------------------------------------

இன்று மேற்குலக மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்திருக்கும் பன்றிக் காய்ச்சலைவிட மோசமான நோயே “வெந்த பன்றிச் சுவை நோய்”. இந்த நோயே திரு.நரசிம்மன் ராமைப் பீடித்திருக்கிறது. இந்தக் கொடூர நோயைக் குணப்படுத்த வாய்ப்பிருக்கிறதா?

மாபெரும் திருடனாக இருந்த ஒருவன் வால்மீகியாக மாறி ராமாயணத்தை எழுதிய அற்புதம் இந்த மண்ணில் நடக்கவில்லையா?

அதுபோல, நரசிம்மன் ராமும் குணமாவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றே நாம் நம்புவோம். அவ்வாறு அவர் திருந்திவிட்டார் என்றால் நமக்குக் கிடைக்கப்போவது ஒரு பத்திரிகையாள வால்மீகி அல்லவா?

அப்படிப்பட்ட பத்திரிகையாள வால்மீகி உருவாக அவரது நண்பர்களின் அற்பணிப்பும், விடா முயற்சியும் அவசியம்.

அவரது தொழிலில் தொடர்புடையவர்களும், நண்பர்களும், நல்லவர்களுமான பிரஃபுல் பித்வாய், அருந்ததி ராய், சாய்நாத, காஞ்சா இலையா, சசிக்குமார், வி.எஸ்.ராமச்சந்திரன், பத்மா வெங்கடராமன், கே.ஹரிஹரன், மைக்கேல் தாரகன், சூசன் சக்காரியா, ராபின் ரெய்சிக், மைக்கேல் காப்டன், ஏ.எஸ்.பன்னீர்செல்வன்,ஏ.ஆர்.வெங்கடாசலபதி, ஏ.வைத்தியநாதன், சி.பி.சந்திரசேகர்,வ.கீதா, மங்கை, நித்யானந்தன் ஜெயராமன், எம்.எஸ்.எஸ்.பாண்டியன் ஆகியோர்ர் அவர் நல்வழிப் பட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவரது சகோதரி, சகோதரர்களான திருமதி.உஷா, திரு.முரளி மற்றும் திரு. ரவி ஆகியோரும் இந்த முயற்சியில் விடாப்பிடியாக ஈடுபட வேண்டும்.

அப்படிப்பட்ட முயற்சியே நரசிம்மன் ராமின் முதிய நண்பரும், நல்லவருமான அமரர் ஆர்.கே.நாராயணனின் ஆத்மாவை சாந்தப் படுத்தும்.

5 comments:

  1. கட்டுரைகள் 2 பக்க அளவிற்குள் இருந்தால் படிப்பதற்கு ஆர்வமாக இருக்கும். படிக்கத் தொடங்கி 10 நிமிடங்கள் கழித்துதான் விஷயமே வரும் என்றால், விஷயத்தைப் படிக்காமலே போய்விடும் வாய்ப்பு அதிகம். எனவே, பன்றிக் கதைக்கு அடுத்ததாக சில விவரங்களை சில பத்திகளில் கூறிவிட்டு நேராக இலங்கை விஷயத்துக்கு வந்திருந்தால் இந்தக் கட்டுரையை இன்னும் நிறைய பேர் படித்திருப்பார்கள். இதை எழுதியவரும், இனி எழுதுவோரும் அந்த வகையில் முயற்சிப்பது, உங்கள் விஷயங்கள் எளிதாக நிறைய பேரின் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கும்.

    ReplyDelete
  2. நன்றி தமிழன் அவர்களே. அடுத்து வரும் கட்டுரைகளை அவ்வாறே எழுத முயற்சிக்கிறேன்.

    மா_தவி

    ReplyDelete
  3. hi,
    i read ur article which is reflecting our tamilian problem. u should translate the article in english and sent to all media houses in the country when only N Ram change his character.
    thanx.
    Ramanujam

    ReplyDelete
  4. என்.ராமை ஜெயவர்த்தனே வளைத்துப் போட்ட கதையை நீங்கள் கூறாமல் விட்டுவிட்டீர்களே! "ராஜ உபசாரம் யார் கொடுத்தாலும் ராம், ராம நாமம் பாடிவிடுவார்" என்கிறார்கள் ராமை அறிந்தவர்கள்.

    //கட்டுரைகள் 2 பக்க அளவிற்குள் இருந்தால் படிப்பதற்கு ஆர்வமாக இருக்கும். படிக்கத் தொடங்கி 10 நிமிடங்கள் கழித்துதான் விஷயமே வரும் என்றால், விஷயத்தைப் படிக்காமலே போய்விடும் வாய்ப்பு அதிகம். எனவே, பன்றிக் கதைக்கு அடுத்ததாக சில விவரங்களை சில பத்திகளில் கூறிவிட்டு நேராக இலங்கை விஷயத்துக்கு வந்திருந்தால் இந்தக் கட்டுரையை இன்னும் நிறைய பேர் படித்திருப்பார்கள். இதை எழுதியவரும், இனி எழுதுவோரும் அந்த வகையில் முயற்சிப்பது, உங்கள் விஷயங்கள் எளிதாக நிறைய பேரின் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கும்.//

    -என்கிற தமிழனின் கூற்று இங்கே கொஞ்சமும் பொறுத்தமற்றது. என்னைப் பொறுத்த அளவில், 'இன்னும் விறைய எழுதியிருக்கலாமே' என்று ஏங்க்க வைக்கிறது. அரைவேக்காட்டோடு நிறைய பேர் படிப்பதைக் காட்டிலும் முழுமையாய் மூன்று பேர் படிப்பது எவ்வளவோ மேல்.

    மிகச் சிறப்பான நடையுடன், போரடிக்காமல் எழுதியுள்ளீர்கள் மாதவி. தொடர்ந்து எழுதுங்கள், வாழ்துகிறோம்.

    ReplyDelete
  5. "நிறைய" என்பது "விறைய" எனவும், "ஏங்க" என்பது "ஏங்க்க" எனவும் பிழையாய் வெளியாகிவிட்டது. மன்னிக்கவும்.

    ReplyDelete

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது